periyar

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து "தேவர்கள் அசுரனைக்" கொன்றதாகவும் அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும் அதற்கு ஆக மக்கள் அந்த கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.

சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வட நாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப் படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லு வதுண்டு. இதற்கு காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்ன வென்றால் அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழி நிலைக்கும் தமிழர்களின் முட்டாள் தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.

அதாவது இரண்யாக்ஷன் என்னும் ராக்ஷஸன் ஒருவன் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம்.

மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனை சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியை பிடுங்குவதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராக்ஷதனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்.

அந்த சமயத்தில் அந்த பன்றியை பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசூரன் என்று பெயராம்.

இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம்.

மற்றும் இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்.

நரகாசூரன் விஷ்ணுவை தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்த தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம்.

இதுதான் தீபாவளியாம்.

தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக்கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில்

பூமியை ஒரு ராக்ஷதன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்.

சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதின்மேல் இருந்திருக்கும்?

கடவுளுக்கு சக்தி இருந்தால் பூமியையும் நரகாசூரனையும் "வா" என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?

அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?

அந்த அழகை பார்த்து பூமி தேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாளென்றால் பூமி தேவியாகிய பாரதத்தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. "நம்" பாரதத்தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர் களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின பாரததேவியும் அரபிக்கடலும் வங்காளக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

இப்படி கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம் ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டு மென்று கேட்டுக் கொண்டிருப்பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறைபிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னம் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று தானே அருத்தமாகும்? அப்படித் தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.

ஆகவே பாமர மக்களுக்கு புத்தி இல்லாவிட்டாலும் பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கரஸ்காரர்களுக்கு சுரணை இல்லாவிட்டாலும் மற்ற தமிழ்ப் பண்டிதர்களும் தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக்கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப்பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.

ஹிந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே ஹிந்தியை கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும் மன வேதனையும் படுவது உண்மையானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?

- விடுதலை

குடி அரசு - மறுபிரசுரம் - 31.10.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: