PEERIYAR 350

காங்கரசின் சுயராஜ்யமென்பதற்கோ பூரண விடுதலை என்பதற்கோ அருத்தம் ராமராஜ்யம் என்றும் சுயராஜ்யம் கிடைத்துவிட்டது என்றால் ராமராஜ்யக் கொள்கைப்படியே ஆட்சி நடைபெறும்படி செய்வதுதான் என்றும் காங்கரசில் நாலணா மெம்பராகக்கூட இல்லாத காங்கரஸ் சர்வாதிகாரியான காந்தியார் முதல் காங்கரசின் பேரால் ஏதேச்சாதிகாரம் செலுத்தும் கனம் சி.ஆர். ஆச்சாரியார் முதலிய சகல பார்ப்பனர்களும் சொல்லி வருவது யாவருமே அறிந்ததாகும். அந்த ராமராஜ்யக் கொள்கையினிடத்தில் மக்களுக்கு மரியாதையும் பெருமையும் ஆசையும் வருவதற்கு ஆக ராமாயணத்தை ஆரிய முறைப்படி படிப்பதற்கு ஆக ஹிந்தியை படிக்கும்படி குழந்தைகளை கட்டாயப்படுத்துவதும் அதை ஆக்ஷேபித்து தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்து வருவதும் வாசகர்கள் உணர்ந்ததேயாகும்.

பொதுவாக ராமராஜ்யம் என்றால் மனுதர்ம ஆட்சி என்பதும், மனுதர்ம ஆட்சி என்பது வருணாச்சிரம ஆட்சி என்பதும், நாம் சொல்லாமலே வாசகர்கள் அறிந்த விஷயமாகும்.

தோழர் காந்தியார் அவர்களும் அநேக தடவைகளில் தான் ஒரு பரிசுத்த வருணாச்சிரமவாதி என்றும் வருணாச்சிரம ஆட்சியை ஏற்படுத்தவே சுயராஜ்யம் கோருகிறேன் என்றும் பல தடவை வடநாட்டுப் பிரசங்கங்களில் வெளிப்படையாகச் சொல்லி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் காங்கரசானது எப்படியோ சூழ்ச்சிகளும் புரட்டு பித்தலாட்டங்களும் செய்து ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றிய உடன் இப்போது மேலே நாம் கூறியது போலவே வர்ணாச்சிரம ஆட்சியை ஏற்படுத்தவும் வர்ணாச்சிரம முறையை நிலைநிறுத்தவும் காந்தியாரும் பார்ப்பனரும் பச்சையாகவே பாடுபட்டுவருகிறார்கள். இக்கொடுமைக்கு தமிழ்நாட்டில் சில பார்ப்பனரல்லாதார் அதிலும் மனு ஆட்சி முறைப்படி எந்தக் கூட்டத்தார் சூத்திரர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் வேசி மக்கள், விவசாரி மக்கள் என்றும் இதுவரை அழைக்கப்பட்டு வந்ததோடு இனியும் அழைக்கப்பட ஆளாகப் போகிறார்களோ அந்த மக்களில் சிலரே இப்போது உதவி புரிந்தும் காட்டிக்கொடுத்தும் வயிறு வளர்க்கிறார்கள் - பதவி அடைகிறார்கள் என்பனவற்றை எடுத்துக்காட்டவே இதை எழுதுகிறோம்.

மனு ஆட்சியில் பார்ப்பனரல்லாதார்கள் ("சூத்திரர்கள்") படிக்கக்கூடாது என்பது முக்கிய தத்துவமாகும். "படித்த சூத்திரனையும் குளித்த குதிரையையும் பக்கத்தில் வைத்திருப்பது ஆபத்து" என்பது மனு முதலிய சாஸ்திர வாக்கியம்.

" "சூத்திர"னிடத்தில் பணம் இருக்க இடம் கொடுத்தால் அது பிராமணனுக்கு ஆபத்து" என்பது மனுதர்மம்.

" "சூத்திரனுக்கு" கல்வி கற்றுக்கொடுத்த பிராமணன் நரகத்துக்கு போவான் " என்பதும் மனு வாக்கியம்.

" "சூத்திரன்" ஆட்சி புரிகின்ற நாட்டில் "பிராமணன்" குடி இருக்கக்கூடாது" என்பதும் சாஸ்திர வாக்கியம்.

எனவே இந்தக் காரணத்தினாலேதான் அந்நிய நாட்டினரிடம் "இந்து சாஸ்திரங்களுக்கு விரோதமாய் நடப்பதில்லை - அவற்றில் கை வைப்பதில்லை" என்று வாக்குறுதி பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு அடிக்கடி அந்நிய ஆட்சியை பார்ப்பனர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சரித்திர ஆதாரமும் பிரத்தியக்ஷ நடவடிக்கை அனுபவமும் இருந்து வருகிறது.

இப்போதைய ஆங்கிலேய ஆட்சியானது முஸ்லீம்கள் ஆட்சியைவிட வெகு தூரத்துக்கு வருணாச்சிரமம் கெடும்படி செய்து வந்திருக்கிறது என்பதை யாரும் ஒப்புக்கொள்ளுவார்கள்.

சண்டாளர்கள் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சூத்திரர் வேசி மக்கள் என்னும் பார்ப்பனரல்லாத இந்திய மக்களையும் முஸ்லீம்கள் மதம் மாற்றப்படுவதன் மூலமே மனிதத்தன்மை உண்டாக்கிவந்தார்கள். அதனாலேயே இன்று இந்தியாவில் 8 கோடி மக்கள் சமுதாய சுயமரியாதையுடன் வாழச்செய்ய முடிந்தது.

ஆங்கிலேய ஆட்சியோ மதம் மாறவேண்டிய அவசியமில்லாமலே ஒரு அளவுக்கு சமுதாய சுயமரியாதை உண்டாகும்படி செய்து வந்திருக்கிறது. இதனாலேயே வருணாச்சிரம காந்தியாரும் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத கூலிகளைக் கொண்டே சிறிது காலமாய் ஆங்கிலேயருக்கு தொல்லை கொடுத்து வந்தார்கள். எப்படியோ இப்போது ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தத்தக்க யோக்கியதையை இந்த வருணாச்சிரமிகள் அடைந்து பழையபடியே ஆங்கிலேயருக்கு தாசத்துவம் பாடவும் ஆங்கில அதிகாரிகளுக்கும் தலைவர்களுக்கும் அடிபணிந்து புகழ்பாடி அவர்கள் நிலைக்க சிபார்சு பேசவுமான யோக்கியதைக்கு வந்து விட்டார்கள். அரசியலின் பேரால் செய்யப்படும் ஒவ்வொரு காரியத்தையும் ஆங்கில அதிகாரிகளைக் கலந்து ஆங்கில ஆட்சிக்கும் ஆங்கில அதிகாரிகளுக்கும் இதனால் யாதொரு கெடுதியும் குறைவும் இல்லை என்று மெய்ப்பித்துக் காட்டிய பிறகே செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த முறையிலேயே ஹிந்தியை நம் மக்களுக்குள் புகுத்த வேண்டுமென்று தொல்லை கொடுப்பதுடன் இப்போது பொதுக் கல்வி விஷயத்திலும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்குக் கொடுமை செய்யத் துணிந்துவிட்டார்கள்.

அதாவது இந்தியாவில் பார்ப்பனரல்லாத ஏனைய மக்கள் அறிவுக் கல்வி பெறாமல் இருக்கத்தக்க சூழ்ச்சி இப்போது காந்தியாரால் செய்யப்படுகிறது.

அவை என்னவென்றால்,

1. "பிள்ளைகளுக்கு 7 வயது முதல் 14 வயது வரை இலவச கட்டாயப் படிப்புப் படிப்பிக்க வேண்டும்.

2. இந்த 7 வருஷமும் தாய் பாஷையிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

3. பாடங்கள் என்பது ஏதேனும் ஒரு கைத்தொழிலை அனுசரித்ததாகவே இருக்கவேண்டும்.

4. அந்தக் கைத்தொழிலைப் பழகுவதன் மூலமே வரும்படி ஏற்படும்படி செய்து அந்த வரும்படியிலேயே பள்ளிக்கூடம் நடைபெற வேண்டும்.

5. இந்த மாதிரி பள்ளிக்கூடம் பூராவும் சர்க்காரே நடத்த வேண்டும்."

என்று காந்தியார் கல்வித்திட்டம் வகுத்து இருக்கிறார். காந்தியாரின் கல்வித் திட்டம் என்றால் காங்கரஸ் கல்வித் திட்டம் என்று பெயர். காங்கரஸ் கல்வித் திட்டம் என்றால் இந்திய அரசாங்கத்தின் கல்வித் திட்டம் என்று பெயர்.

ஆகவே இனி நமது மக்களின் கல்வித் திட்டம் மேல் குறிப்பிட்டது என்று ஏற்பட்டு விட்டது.

காந்தியார் வாயிலிருந்து வந்து விட்டதால் இனி இதை எந்த காங்கரஸ் வாதியும் குறைகூற மாட்டான். குறைகூறினால் தேசத்துரோகியாகிவிடுவான். அதுமாத்திரமல்லாமல் குறைகூறுபவன் மந்திரியாய் இருந்தால் மாதம் 800 ரூபாய் சம்பள வரும்படிவாயிலும் பிரயாணத்திட்டத்தில் மாதம் 300 ரூபாய்க்கு குறையாத பிரயாண வரும்படி வாயிலும் ஒரு கூடை மண்ணு விழுந்துவிடும். சட்ட சபை காரியதரிசியாய் இருந்து குறைகூறினாலோ கிட்டத்தட்ட இதில் பகுதித்தொகை அளவு கிடைக்கும் வரும்படி வாயிலும் மந்திரிகளுக்கு யாருக்காவது ஏதாவது காரியம் சிபார்சு செய்வதால் கிடைக்கும் வரும்படி வாயிலும் மண்ணு விழுந்துவிடும்.

சட்டசபை மெம்பராக இருந்து குறைகூறி விட்டாலோ அவர்களுக்கும் மாதம் 75 ரூபாய் வரும்படி வாயிலும் மாதம் சுமார் 100 ரூபாய்க்குக் குறையாத பிரயாணப்படி வரும்படி வாயிலும் சிபார்சு செய்வதில் ஏதாவது கிடைக்கக்கூடிய வரும்படி வாயிலும் மண்ணு விழுந்துவிடுவதோடு பலருக்கு சாப்பாட்டுக்கே ஆபத்து ஆகிவிடும். இவர்கள் சங்கதியே இப்படி இருந்தால் இனி காங்கரஸ் பக்தர்கள், தொண்டர்கள் ஆன பிரசாரகர்கள் சங்கதி கேட்க வேண்டுமா, அல்லது நாம்தான் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ஆகவே இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று தான் காந்தியாரும், கனம் ஆச்சாரியார், தோழர் சத்தியமூர்த்தியார் ஆகியவர்கள் கோஷ்டியாரும் உறுதியுடன் இருப்பார்கள். கவர்னர், கவர்னர் ஜனரல் ஆகிய பிரபுக்களும் நாம் எவ்வளவுதான் கூப்பாடு போட்டாலும் 1000 கணக்காய் ஜெயிலுக்குப் போகவும் 100 கணக்காய் கவர்னர்கள் மோட்டார் வண்டிகளின் சக்கரத்தில் சிக்கி உயிர்விடும் படியாகவும் போலீஸ் அடிபடும்படியாகவும் ஏற்பட்டால் ஒழிய அவர்கள் "புதிய அரசியல் திட்டத்தில் இதுவிஷயம் மந்திரிகளைச் சேர்த்து விட்டதாலும் மந்திரிகள் இதனால் கல்வி கெட்டுப் போகாது என்று உறுதி கூறி இருப்பதாலும் இந்த விஷயத்தில் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை என்று மேன்மை தங்கிய வைஸ்ராய் பிரபுவும், அதற்கடுத்தாப்போல் மேன்மைதங்கிய கவர்னர் பிரபுவும் அபிப்பிராயப்படுகின்றனர்" என்று பதில் அனுப்பிவிடுவார்கள். இதற்கு மேல் நாம் சீமைக்கு எட்டும்படி கூப்பாடு போட்டாலும் இந்தியா மந்திரி வைஸ்ராய் பிரபுவை டெலிபோனில் கேட்கும்போது வைஸ்ராய் பிரபு "காங்கரஸ்காரரின் இந்தக் கல்வித் திட்டத்தினால் கண்டிப்பாய் நமக்கு ஒன்றும் கெடுதி வராது; அவர்கள் எப்படியோ உதைத்துக் கொள்ளட்டும்; இது சமயம் காங்கரஸ்காரர்கள் நமக்கு நிபந்தனை இல்லாத அடிமைகளாய் இருக்க பிரமாண வாக்கு கொடுத்து விட்டார்கள். ஆதலால் இதைப்பற்றி நாம் கவனிக்கவேண்டியதில்லை" என்று சொல்லிவிடுவார். அதைக்கேட்டுக்கொண்ட பின் "இந்த விஷயத்தில் இந்தியா மந்திரி ஒன்றும் செய்வதற்கில்லை" என்று சொல்லி விடுவார்.

பிறகு நமக்கு இந்த வருணாச்சிரம கொடுங்கோன்மை ராஜ்ஜிய பாரத்தை ஒழிக்கவும், ஆங்கிலேய ஆட்சி முறையின் பொறுப்பற்ற தன்மையை ஒழிக்கவும் முஸ்லீம்களானால் ஒழிய வேறு வழி இல்லை என்கின்ற நிலைதான் ஏற்படக்கூடும்.

இனி இந்த காங்கரஸ் கல்வி திட்டத்தின் சூழ்ச்சியை சற்று கவனித்து பார்ப்போம்

இந்த கல்வி திட்டத்தைப்பற்றி பொதுவாக அபிப்பிராயம் சொல்ல வேண்டுமானால் இது மக்களை அறிவுக்கல்வி படிக்க வொட்டாமல் செய்து விடும். இதனை மக்களுக்கு கைத்தொழில் சொல்லிக்கொடுக்கும் ஒரு தொழிற்சாலை என்று தான் சொல்லவேண்டும். தொழில் பள்ளிக்கூடம் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் இந்த தொழில் மூலம் (வாத்தியாருக்கு சம்பளம் முதலிய) வரும்படியும் எதிர்பார்ப்பதால் இதை ஒரு அரை குறையான தொழிற்சாலை என்றுதான் சொல்ல வேண்டும்.

திட்ட ஆராய்ச்சி

பிள்ளைகள் 7 வயது முதல் 14 வரை கட்டாயமாக படிப்பிக்க வேண்டுமென்றால் 7 வயது வரை பையன்களுக்கு வேலை என்ன? பார்ப்பனப் பிள்ளைகள் நாலரை வயது 5 வயதிலேயே பிரைவேட்டாகப்படிக்க வைத்து 7 - வது வயதில் முதல் அல்லது 2-வது பாரத்தில் சேர்க்கப்பட்டு விடுகிறார்கள். அதனாலேயே அவர்கள் 14 அல்லது 15 - வது வயதில் எஸ்.எஸ்.எல்.சி. அல்லது மெட்ரிக்குலேஷன் படிக்கவோ பாஸ் செய்யவோ முடிகின்றது. நம்முடைய பிள்ளைகளுக்கு 6, 7 - வது வயதில் "எழுத்தாணிப்பால்" கொடுத்து "சரஸ்வதி பூஜை" செய்து "அக்ஷராப்பியாசம்" ஆரம்பித்தால் முதல் பாரத்துக்கு வர 5 வருஷமும் முதல் பாரத்தில் இருந்து மெட்றிக்குலேஷன் பரீட்சைக்கு போக ஆறு வருஷமும் ஆக 11 வருஷமும் ஆகிறது. பரீட்சைகளில் ஏதாவது ஒன்று இரண்டுவருஷம் தவறிவிட நேர்ந்தால் மெட்றிக்குலேஷனுக்கு போவதற்குள் கையில் ஒன்று இரண்டு குழந்தைகளோ அல்லது உடம்பில் வியாதியோ ஏற்பட்டு மைனர் விளையாட்டில் திரும்பி விடுகிறான். ஏற்கனவே நமது பிள்ளைகள் படிப்பு இதனாலேயே கெட்டு மொத்த எண்ணிக்கையில் விகிதாச்சாரம் குறைந்து இருக்கிறது. இந்த நிலைமையில் இனி "7 முதல் 14 - வயது வரை தொழிலின் மூலம் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கும், வாத்தியார் சம்பளத்துக்கும் போதிய வரும்படி கிடைக்கும்படியான கல்வி" தாய் பாஷையில் கற்பது என்றால் பையனுக்கு உலகஞானமோ வாழ்க்கை அறிவோ அடைய வேண்டியகாலம் எது? அதற்கு ஏற்ற கல்வி எங்கே? என்று கேட்கிறோம்.

அப்புறம் 1, 2, 3 - வது பாரங்களில் ஹிந்தி கட்டாய பாடமாக்குவது என்பது எந்தப் பிள்ளைகளுக்கு? எந்த வயதில்? என்றும் கேட்கவேண்டி யிருக்கிறது. மற்றும் இந்தத்திட்டப்படி 14 வயது ஆனபிறகு அப்புறம் பையனுக்கு வேலை என்ன? என்பது விளங்கவில்லை. இனி இங்கிலீஷ் படிப்பது எப்போது?

பிள்ளைகள் பூராவுக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் கைத்தொழில் அவர்களது வாழ்க்கைக்கு பயன்படுமா? இந்தியாவில் இம்மாதிரி கைத்தொழிலுக்கு இனியும் எத்தனை காலத்துக்கு அவசியம் இருந்து வரமுடியும்? இருந்துவர இடம் கொடுப்பது? உலகத்தில் கைநெசவு என்பதுகூட இந்தியாவில் தான் இருக்கிறது. மற்ற நாடுகள் எல்லாம் யந்திரத்தில்தான் துணிகளை நெய்கின்றன.

விவசாயமும் யந்திரத்தால் உழுது யந்திரத்தால் விதைத்து யந்திரத்தால் நீர் பாய்ச்சி யந்திரத்தால் அறுப்பு அறுத்து பண்டமாக்கி யந்திரமூலமே இடையாக்கி யந்திரமூலமே பணம் வருகின்றன. விவசாயமும் நெசவுமே யந்திரத்தின் மூலம் என்று ஆகிவிட்டால் மற்றபடி கையில் செய்யும் கைத்தொழில் என்ன இருக்கிறது? நெல் குத்துவதும் கருப்பட்டி காய்ச்சுவதும் பால் கறந்து வெண்ணெய் எடுப்பதா? சோப்பு, சீப்பு, கண்ணாடி, வாசனை எண்ணெய் செய்வதா? அல்லது மேஜை நாற்காலி, தட்டுமுட்டு சாமான் பாத்திரம் பண்டம் செய்வதா? கட்டை வண்டி, மோட்டார் சைக்கிள், ரயில், ஆகாய விமானம் செய்வதா? அல்லது கல் உடைத்து ரோட்டுப்போடுவதா? பாலம் கட்டுவதா? காடுவெட்டித்திருத்துவதா? வாய்க்கால் வெட்டித் தண்ணீர் விடுவதா? இவை எல்லாமுமே யந்திரங்களினால் செய்யப்படுகின்றன. கக்கூசு எடுக்கும் வேலையும் (ஊடூதண்டணிதt) தானாய் கழுவிக்கொண்டு போகும் முறை வரப்போவதால் ஆளுக்கு வேலையில்லாமல் போகப்போகின்றது. தச்சு வேலை, கொல்லு வேலை, கொல்லத்து வேலை ஆகியவைகளும் பெரிதும் இனி மனிதன் தன் கைப்பட செய்ய வேண்டிய அவசியமில்லாத முறையில் நடைபெறப் போகின்றன. கொல்லத்துக்காரனுக்கு வேலை இல்லாத மாதிரி கற்கள், பலகைகள், சிமிட் அட்டைகள் யந்திரங்களில் செய்யப்பட்டு ஒரு நாளில் 5 வீடு 10 வீடு கட்டும் படியான வேலைத் திறங்கள் யந்திரங்களில் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் இருக்கின்ற உலகத்தில் இன்று காந்தியாரின் கல்வித் திட்டம் என்று சொல்லப்படும் காங்கரஸ் கல்வித்திட்டம் இந்தியாவில் ஏற்படுத்தப்படுமானால் மேலே கூறப்பட்ட யந்திர சம்மந்தமான காரியங்கள் எதுவும் இந்தியாவுக்குள் நடைபெறக்கூடாது என்றும் மீறி நடத்தப்பட்டால் அதை ராஜதுவேஷமாகக் கொள்ளப்படும் என்றும் சட்டம் போட்டு அக்காரியங்கள் தடுக்கப்பட்டுவிட்டால் மாத்திரமேதான் இது பயனுள்ளதாக ஆகலாம். அல்லாதவரை பார்ப்பனர்களே உயர்ந்த ஜாதியாராகவும் அரசியல், மத இயல், பொருளாதார இயல், சமூக இயல் ஆகியவைகளில் ஆதிக்கம் செலுத்தி பாடுபடாமல் வயிறு வளர்க்கவும் மற்ற சமூகம் அவர்களது வைப்பாட்டி பிள்ளைகளாய், அடிமைகளாய் வாழவும் தான் இக்கல்வித்திட்டம் பயன்படும் என்று கண்டிப்பாய்க்கூற வேண்டி இருக்கிறது.

தவிர பிள்ளைகள் கற்றுக்கொள்ளும் முறையில் செய்யப்படும் தொழில்கள் மூலம் ஏற்பட்ட சாமான்களை பொது ஜனங்களும் சர்க்காராரும் வாங்குவதன் மூலம் பள்ளிக்கூட நடப்புக்கு பணம் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமென்றால் இதன் முடிவும் துணி விஷயத்தில் எப்படி கதர் துணிக்கு ஒன்றுக்கு மூன்றாய் நான்காய் கிரையம் போட்டு ஆபாச வலுவற்ற முரட்டுத் துணியை வாங்கி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியவர்களானார்களோ அதுபோல் தான் மற்ற சாமான்கள் வகையிலும் ஒன்றுக்கு மூன்றாய் விலை கொடுத்து ஆபாச - பலமற்ற கெட்ட அல்லது முரட்டுக் கதர் சாமான்களை வாங்கி பயன்படுத்தித் தீர வேண்டிய நிலைமை ஏற்படும். ஏனெனில் இந்த மாதிரி குழந்தைகளால் வேலை பழகுவதற்கென்று செய்யப்படும் சாமான்களின் யோக்கியதை மற்றபடி வேறு எப்படி இருக்க முடியும்? வேண்டுமானால் விவசாயம் பழகுவதில் செய்யும் காரியத்தால் ஒரு சமயம் கத்திரிக்காய் புடலங்காய் நல்லதாக கிடைக்கலாம். அது எவ்வளவு பேருக்கு கிடைக்கும்? அதில் எவ்வளவு வரும்படி வர முடியும். அப்படி இருந்தாலும் அந்த வேலையை 7 முதல் 14 வயது வரை எல்லாப் பிள்ளைகளும் படிப்பது என்று வைத்துவிட்டால் அது அறிவுக்கு பயன்படுமா? மற்ற சமயத்தில் இது படிக்க முடியாதா? ஆகவே காந்தியார் கல்வித்திட்டம் என்பது மனுதர்மத்தில் "சூத்திரனு"க்கு ஏற்பட்ட வேலைத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு ஆக செய்யப்படும் சூழ்ச்சியே ஒழிய மற்றபடி அது ஒரு நாளும் யோக்கியமான நாணையமான கல்வித் திட்டமாகாது என்பது நமதபிப்பிராயம். ஆகவே இதை பொதுமக்கள் உணர்ந்து இந்த சூழ்ச்சியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும்.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 21.11.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: