periyar 250

தற்கால அரசியல் நிலை விளக்கம்

அல்லாதார் முன்னேற்றத்திற்கு யோசனை

தலைவரவர்களே! தோழர்களே!!

இன்று கூட்டியிருக்கும் இவ்வளவு பெரிய கூட்டம் இந்த நடு ஜாமம் 11-மணி நேரத்தில் நடைபெறுவதை நான் மேல் நாட்டில் பார்த்திருப்பதை தவிர கீழ் நாடுகளில் பார்த்ததில்லை. ஆனால் காங்கரஸ், சு.ம.மகாநாடுகளிலும் உற்சவங்களிலும் நாடகம், சினிமா தெருக்கூத்து ஆகியவைகளிலும் அதிலும் அபூர்வமாகவே பார்த்திருப்பேன். அதுவும் சமீபத்தில் 4, 5 வருஷங்களில் கண்டதாக ஞாபகமில்லை. இப்போது கொஞ்சகாலமாக அதுவும் காங்கரஸ் மக்களை ஏமாற்றுவதில் வெற்றி பெற்று அரசாங்கத்தினிடம் சரணாகதி அடைந்து அரசியல் பதவிகளை அடைந்தது முதல் நாட்டில் இந்தியா முழுவதிலும் முஸ்லீம்களது விழிப்பு அதிகமாகக் காணப்படுவதுடன் எங்கும் ஒரு வித கிளர்ச்சி நடந்து கொண்டு வருகிறது.

காங்கரஸ் பேயாட்டம்

ஏனெனில் காங்கரஸ்காரர்கள் வெற்றி பெற்றுவிட்டபின் தங்கள் வெற்றியின் காரணத்தை உணர்ந்து வெட்கப்படாமலும், சரணாகதி அடைந்ததைப்பற்றி அவமானப்பட்டு தலையை மறைத்துக் கொள்ளாமலும் வெற்றி போதையில் முஸ்லீம் லீக்கையும், ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதை இயக்கத்தையும் கொன்று 5000கஜ ஆழத்தில் புதைத்து விட்டதாக பேயாட்டம் ஆடி வருகிறார்கள். இதற்கு அவர்களுக்கு ஆக்கமளிப்பது இன்று சர்க்காரிடம் சரணாகதி அடைந்து மந்திரி பதவி பெற்று அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதேயாகும். இன்றைய மந்திரிகள் எல்லோரும் காங்கரசின் பேரால் பதவியிலிருப்பவர்கள், முஸ்லீம்லீக்குக்காரரோ ஜஸ்டிஸ் கட்சியாரோ சுயமரியாதைக்காரரோ யாரும் மந்திரியாய் இல்லை. மந்திரி பதவிகளில் முஸ்லீம்களும், பார்ப்பனரல்லாதாரும், சுயமரியாதைக்காரரும் மந்திரிகளாய் இருப்பதாய் நமக்குத் தெரிந்தாலும் அவர்கள் ஒரு காலத்தில் அந்தப்படி இருந்து இப்போது அந்தந்த கட்சி நலன்களை காட்டிக்கொடுத்து பதவி பெற்றதோடு அக்கட்சிகளை ஒழிப்பதற்கும் பார்ப்பனர்களுக்கு கையாளாய் இருந்து வர ஒப்புக் கொண்டிருப்பதாலேயே அவர்களுக்கு அப்பதவி கிடைத்திருக்கிறது. ஆகவே நமக்கு காங்கிரஸ் மாத்திரமோ, பார்ப்பனர்கள் மாத்திரமோ எதிரிகள் அல்ல.

நம்மவர்களும் எதிரிகளே

மற்ற நம் இயக்கங்களை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எதிரிகளாய் இருக்கிறார்கள். நம் இயக்கங்களையும், நமது முற்போக்குகளையும் கொன்று தடைப்படுத்தவே இன்று காங்கரஸ் அரசாங்கம் இருந்து வருகிறது. அதன் எதிரொலி தான் முஸ்லீம் லீக்கும், பார்ப்பனரல்லாதார் கட்சியும், சு.ம. இயக்கமும் புதைக்கப்பட்டு விட்டது என்று கூறி பார்ப்பனர்கள் கூத்தாடுவதாகும்.

இந்தக் காரணமேதான் இன்று முஸ்லீம்களையும் பார்ப்பனரல்லாதார் களையும் சுயமரியாதைக்காரர்களையும் ஒன்று சேர்த்து இருக்கிறது. இந்த உணர்ச்சி தான் இன்று இந்த நடு இரவு 12 மணி ஜாமத்தில் 3000, 4000 பேர்களை இந்தக் குளிரிலும் பனியிலும் கூடி இருக்கும்படி செய்திருக்கிறது.

நம் மூவருக்கும் காங்கரஸ் ஒரே மாதிரியான விரோதி. நம் மூவருக்கும் ஜீவநாடியான அவசியமான ஒரு காரியத்தில் காங்கரஸ் விரோத பாவங்கொண்டு அடியோடு அழிக்க முயற்சித்து வருகிறது. அது என்னவென்றால் அதுதான் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நாம் நமது எண்ணிக்கைக்கும் தகுதிக்கும் உரிமைக்கும் மேலாக சிறிதுகூட கேட்கவில்லை. நம் விகிதாச்சாரம் உரிமையுள்ள அளவே விரும்புகிறோம். ஏனெனில் நாம் இவ் விஷயத்தில் ஆதிமுதல் கவலையற்று இருந்ததால் இந்நாட்டு ராஜ வம்சங்கள் சக்ரவர்த்தி வம்சங்கள் என்ற மக்களும் இந்நாட்டு பழங்குடி மக்கள் என்ற மக்களும் இந்நாட்டு செல்வங்களும் உழைப்பாளியும் வரி கொடுப்பவனுமான சமூக மக்களும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் சமூகவாழ்விலும் கீழ் மக்களாய் இழி மக்களாய் கருதப்பட்டு சராசரி வாழ்வுக்குக் கூட இடமின்றி ஈன மக்கள் என்று கருதும்படி இருந்து வருகிறோம்.

பிச்சைக்கார ஜாதி

ஆனால் இதற்கு மாறான மற்றொரு ஜாதியார் அதாவது பிச்சை எடுப்பதை பிறவி உரிமையாகக்கொண்ட ஒரு வகுப்பு இன்றும் முன்பும் எப்போதுமே சிறிதும் பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே சகல போக போக்கியமும் பெற்று சமூகத்தில் ஜாதியில் பெரிய ஜாதி ஆகி செல்வத்தில் பாடுபடாமல் ராஜபோகமனுபவித்துக்கொண்டு அரசியலில் இன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதை நாம் இன்று இந்த 20, 30 வருஷகாலமாகவே உணர்ந்து நமது பங்கை - நம் உரிமையை மற்றவர்கள் கொள்ளை அடிக்காமல் பார்த்து வருகிறோம். ஆனால் நாம் அதற்காக செய்ய வேண்டிய முயற்சி சரியாய் கவலையுடன் செய்யாததாலும் நம்மக்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி சரியாய் இல்லாததாலும் யோக்கியமும் நாணையமும் உள்ள தலைவர்கள் போதிய அளவு இல்லாததாலும் நாம் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டே வந்திருக்கிறோம். அத்தோல்வியின் கடைசி எல்லைதான் நாம் இன்று இருக்கும் நிலை. அதனால் தான் நம்மை 5000கஜ ஆழத்தில் வெட்டி புதைத்து விட்டதாக பார்ப்பனர்கள் அதாவது கனம் ராஜகோபாலாச்சாரியார், தோழர் சத்தியமூர்த்தியார் முதலியவர்கள் கூறுகிறார்கள்.

தோல்வியும் நன்மைக்கே

என்றாலும் நாம் இன்றைய நிலையை தோல்வி என்று கருதிவிட வேண்டியதில்லை. இதிலிருந்து நாம் வெற்றியை நாடிச்செல்லும் நிலைக்கு வந்திருக்கிறோம் என்றுதான் எண்ணவேண்டும். சட்டசபை தேர்தல் தோல்வியும் மந்திரி சபையில் நம் பிரதிநிதிகள் இல்லாத தோல்வியும் ஒரு சமூகத்துக்கு ஒரு இயக்கத்து தோல்வி ஆகிவிடாது. பலமான - சுலபத்தில் அசைக்க முடியாததான ஒரு வெற்றியை லட்சியத்தை அடையவே அடைந்து தீரவே நமக்கு இன்று இத்தோல்வியில் வழிகாட்டப்பட்டிருக்கிறது. இதைத்தவிர இனி நமக்கு இது போன்ற சந்தர்ப்பம் கிடைக்காது.

நாம் மூவரும் காங்கரஸ் ஸ்தாபனத்தை நமக்கு பரம விரோத ஸ்தாபனமாய் கருதவேண்டியவர்களாவோம்.

காங்கரஸ் தோற்றத்திற்கு சர்க்காரே காரணம்

காங்கரஸ் ஆரம்பிக்கப்பட்டதே அக்கருத்து மீதுதான். ஏனெனில் அரசாங்கத்தாரே காங்கரஸ் ஆரம்பிக்கப்பட யோசனை சொன்னவர்களாகும். சர்க்கார் காங்கரஸ் ஏற்படுமுன் முஸ்லீம்களையும், பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களாய் இருந்தவர்களிடத்திலும் மிக்க பயபக்தியாய் இருந்து வந்தது. அவர்கள் சர்க்காருக்கு தாளம்போட இஷ்டமில்லாதவர்களாய் சர்க்காரையும் தங்கள் இஷ்டப்படி ஆட்டி வந்தார்கள். அதற்கு விரோதமாய் சாதாரண கீழ்த்தர மக்களைத் தூண்டி விடவே சர்க்கார் காங்கரசை ஏற்படுத்தச் செய்தார்கள். அது முதல் தான் சாதாரண மக்கள் அதாவது பாடும் பொறுப்பும் இல்லாத மக்கள் நாட்டுச் செல்வத்தையும் உழைப்பையும் பாடுபடாமல் பொறுப்பு ஏற்காமல் வயிறு வளர்க்கும் சோமாரி மக்கள் அரசாங்கத்துக்கு வலக்கையாய் இருக்கும்படி தந்திரங்கள் செய்ய முடிந்தது. அதனாலேயே சர்க்காரும் மக்களுக்கு இவ்வளவு கொடுமையான வரிகளைப் போடவும் போட்ட வரிகள் பயன்படாமல் ஒரு ஜாதியாரே உத்தியோக மேற்று பகல் கொள்ளை போல் சம்பளமாகப் பெறுவதற்கே பயன்படவும் முடிந்தது.

காங்கரசுக்கு முன்

உதாரணம் சொல்ல வேண்டுமானால் காங்கரசுக்கு முன் இவ்வளவு பார்ப்பனர்கள் இவ்வளவு பெரிய உத்தியோகங்களில் இருந்ததில்லை. காங்கரசுக்கு பிறகே பார்ப்பனர்கள் அதுவும் நாட்டு நலத்தில் முற்போக்கில் மனித சமூக மனிதத்தன்மையில் இருந்தும் பொறுப்பு இருக்க இடமும் அவசியமும் இல்லாதவர்களே இன்று பெரும் பொறுப்புள்ள உத்தியோகத்தில் 100க்கு 90-க்கு மேல் கைப்பற்ற முடிந்தது. அந்த சமூகமே ஏழையென்று இல்லாமலும், கல்வி இல்லாதவர்கள் என்று இல்லாமலும், வேலை இல்லாதவர்கள் என்று இல்லாமலும் மனித சமூகத்தில் எந்தக் காரணத்தாலும் கீழ்பட்ட மக்கள் என்று இல்லாமலும் சராசரிக்கு வெகுபங்கு மேலாக வாழ முடிந்தது என்பதுடன் அதற்கு நேர்மாறாய் பாடுபடும் மக்களும் பொறுப்புள்ள மக்களும் அரசாங்க பொக்கிஷத்தை சதா நம்பும்படியாக வரிசெலுத்தும் மக்களும் கீழ்மக்களாக, அடிமைகளாக அரசாங்கம் என்றால் நடுங்கிச் சாகும்படியாக அவ்வளவு இழிவான அறிவற்ற நிலையில் வாழ நேர்ந்தது.

முஸ்லீம்லீக் தோற்றம்

இதை முதல் முதலில் முஸ்லீம்கள்தான் கண்டு பிடித்துக் காங்கரஸ் மனித சமூகத்துக்கு விரோதமான ஸ்தாபனம் என்பதை சகல வழிகளிலும் உணர்ந்து கிளர்ச்சி செய்தவர்களாகும்.

1885ல் காங்கரசு வந்தது என்றாலும், 1890 லேயே முஸ்லீம்கள் காங்கரசை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள். 1900ல் முஸ்லீம்கள் தனி உரிமை - தனிபிரதிநிதித்துவம் பெற ஆரம்பித்து விட்டார்கள். காங்கரசைப் போலவே ஒரு ஸ்தாபனத்தையும் அதாவது முஸ்லீம் லீக்கையும் 1906ல் ஆரம்பித்து 1909 அதாவது ஆரம்பித்த 3 வருஷத்தில் முஸ்லீம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தனித் தொகுதி மூலம் பெற்று விட்டார்கள்.

1906-ல் முஸ்லீம் லீக்கு ஏற்படுத்தி கிளர்ச்சி செய்த காரணத்தால்தான் அது பயன்பெறாமல் செய்வதற்கு பங்காளத்தில் வெள்ளைக்காரர்கள் பஹிஷ்காரம், சுதேசி கிளர்ச்சி முதலிய சூழ்ச்சிகள் செய்ய வேண்டிய அவசியம் இந்துக்களுக்கு ஏற்பட்டது.

முஸ்லீம்கள் காட்டிய வழி

கடசியாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இந்துக்கள் செய்த தேசாபிமான சூழ்ச்சி தோல்வியுற்று 1909ல் சீர்திருத்த சட்ட மூலமாகவே முஸ்லீம்கள் தனிப் பிரதிநிதித்துவம் பெற்றுவிட்டார்கள் - இதைப்பார்த்த பிறகுதான் நம் மாகாணத்திலும் மற்றும் பல மாகாணங்களிலும் இந்துக்களும் தங்களுக்குள்ளாக ஒரு சமூகத்தை ஒரு சமூகம் ஏமாற்றி வஞ்சித்து கொள்ளை கொள்ளும் கொடுமையை ஒழிக்க கிளர்ச்சி செய்தார்கள். அதன் பலன்தான் நம் மாகாணத்தில் 1916ல் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி தோன்ற வேண்டியதாயிற்று. இந்த உணர்ச்சியை ஒழிக்க வேண்டி முஸ்லீம்களை பார்ப்பனர்கள் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஆக பார்ப்பனத் தலைவியாய் இருந்துவந்த பெசண்டம்மை முஸ்லிம்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொள்வதாகவும் முஸ்லிம்கள் மற்ற வகுப்பார்களின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு விரோதமாய் இருந்து காங்கரசுக்கு உதவிசெய்ய வேண்டுமென்றும் ஒப்பந்தம் பேசிக்கொண்டு லக்னோ காங்கரசில் ஒரு பேக்ட் ராஜி உடன்படிக்கை செய்து கொண்டார் என்றாலும் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு கிளர்ச்சி செய்து மக்களுக்கு தங்கள் மான உணர்ச்சி வரும்படி 1916 முதலே உழைத்து வருகிறார்கள். ஒரு அளவுக்கு பயனும் அடைந்தார்கள் என்பதோடு இனி வரும்காலமும் சகல வகுப்புக்கும் சமநீதி வழங்கப்பட வேண்டும் என்கின்ற உணர்ச்சியும் மக்கள் உள்ளத்தில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது.

காந்தியார் தந்திரம்

இதைப்பார்த்த பார்ப்பனர்கள் "ஒன்றில் இது ஒழிய வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும்" என்கின்ற கருத்தைக் கொண்டு விட்டார்கள். அதன் பயன் தான் இன்று காந்தியார் பட்டினி, சண்டித்தனம் செய்ததும் கனம் ஆச்சாரியாரும் தோழர் சத்தியமூர்த்தியும் வங்காளக் குடாக்கடலில் விழுந்து உயிர் விட வேண்டியது என்று சபதம் கூறிக்கொண்டதுமாகும். காங்கரசின் தேசாபிமானமும் பூரண சுயேச்சை செய்யும் சிலர் பேசும் சமதர்மமும் அந்நிய ஆட்சியை ஒழிக்கும் தன்மையும் எல்லாம் இன்றுள்ள வகுப்புவாரி உரிமையை ஒழிப்பதும் அது மறுபடி எப்போதும் தலை எடுக்கவொட்டாமல் அழிப்பதும் தான் என்பது எனது உறுதியான அபிப்பிராயம்.

காங்கரசுக்கு இனி இந்து முஸ்லீம் ஒற்றுமையைப்பற்றிக் கவலை இல்லை.

இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் கேட்கமாட்டேன் என்றும் வந்தாலும் பெற மாட்டேன் என்றும் கூறிய காந்தியார் இன்று சுயராஜ்யம் கிடைத்த பிறகுதான் இவை செய்வேன் என்று சொல்லி விட்டார்.

தீண்டாதார் நசுக்கப்பட்டனர்

தீண்டாமையைப்பற்றி மக்களை ஏமாற்றி தீண்டப்படாதார் என்பவர்களை நசுக்கி ஆய்விட்டது. சில கூலிகளை வசப்படுத்திக் கொண்டதோடு தீண்டாமை விலக்கு தீர்ந்து போய் விட்டதாக செய்து கொண்டார்கள்.

தோழர்கள் என். சிவராஜ், ஆர். சீனிவாசன், அம்பத்கார் முதலிய தீண்டாமை வகுப்பு தலைவர்கள் இன்று தேசத்துரோகிகள் என்றும் சமூகத்துரோகிகள் என்றும் பிரசாரம் செய்யத் துணிந்து விட்டார்கள்.

ஆகவே மக்கள் இந்த மாதிரி சபையைப் பார்த்து மலைக்க வேண்டியதில்லை. முஸ்லிம்களும் அதை லட்சியம் செய்ய வேண்டியதில்லை. காங்கரஸ் மந்திரிசபையைப் பற்றி இன்னும் சிறிது நாட்களுக்குள் "விடுதலை" யில் நாள் எண்ணிக்கை போட்டு கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்ட போதிலும் குற்றமில்லை என்கின்ற எண்ணத்துடன் இன்னும் கொஞ்சகாலத்துக்கு இந்த மந்திரி சபை இருந்தால்தான் அது வேறு யாரும் கொல்லாமல் தானாகவே தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அவசியம் வரும் என்று கருதுகிறேன்.

ஆச்சாரியார் சாதித்ததென்ன?

அது இந்த மந்திரிசபை பதவியேற்று 5 மாத காலத்தில் அவர்களது முட்டாள்தனத்தையும், சூழ்ச்சி உணர்ச்சியையும், தங்களுக்குள் ஒற்றுமையில்லாத நிலையையும் அரசியல் ஞானமற்ற தன்மையையும் காட்டிக்கொள்ளத்தான் முடிந்ததே தவிர நாட்டுக்கோ, தங்களுக்கோ கூட ஒன்றும் செய்து கொள்ள முடியவில்லை. உண்மையில் எனது தோழர் கனம் ஆச்சாரியார் நிலை ஆப்பைப் பிடுங்கிவிட்ட குரங்கு போல்தான் இருந்து வருகிறது. மற்ற மந்திரிகளைப்பற்றி பேசுவது மெனக்கேடே யாகும். ஏனெனில் அவர்களுக்கு சம்பளமும் படியும் கார் சவாரி பந்தாவும் தான் சொந்தமே ஒழிய மந்திரிவேலையில் ஏதும் சொந்தமில்லை. தலைவர் சொன்ன படி பிரதம மந்திரி சொன்னபடி இல்லாவிட்டால் காரியக் கமிட்டி அல்லது காந்தியார் சொல்படி நடக்க வேண்டிய ஒப்பந்தத்தில் சம்பளம் பெறுகிறவர்கள். அவர்களுக்கு சொந்த புத்தி இருந்தாலும் பிரயோகிக்க இடமில்லை. அப்படி பிரயோகிப்பதாய் இருந்தாலும் நாகப்பட்டணம் மரைக்காயர் போல் அம்மா அக்கா என்று வைவதற்கு மாத்திரம் தான் சுதந்தரம் உண்டே ஒழிய யாரையும் புகழவும் முடியாது. சட்டசபை மெம்பர்களே பார்ப்பனர்களுக்குத்தான் ஏதாவது சொல்லவோ, செய்து கொள்ளவோ உரிமை உண்டு. மற்றவர்களுக்கு N ரூ.75 சம்பளமும் பிரயாணப்படியும் பெறுவது தவிர வேறு ஒன்றுக்கும் உரிமை இல்லை. இவர்களில் யாருக்காவது சுயமரியாதை இருந்தால் மாதச் சம்பளம் வாங்குவது அவமானம் என்று கருதி வாங்காமல் விட்டுவிடலாமே தவிர மற்றப்படி பேச்சுமூச்சு காட்டமுடியாது. காட்டினால் 20 ஆயிரம் 30 ஆயிரம் ரூ. செலவு செய்து பெற்ற மெம்பர் வேலையை ராஜிநாமா கொடுக்க வேண்டும். எனவே இப்படி ஒரு ஜனநாயகம் - சுயராஜ்யம் கொண்ட ஆட்சி இன்று இந்தியாவில் நம் தலைமேல் இருக்கிறது. இது காங்கரஸ்காரருக்கு அவமானம் என்று சொல்லுவதை விட நமக்கு நாம் இதில் பிரஜையாய் இருப்பது பேரவமானம்தான். ஆனால் அதற்கு முடிவு காலம் வருகிற சந்தர்ப்பமாய் இது இருப்பதால் தைரியமாய் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆகவே தோழர்களே நம்முள் உள்ள சில்லறை அபிப்பிராய பேதத்தை மறந்து விடுங்கள்.

இந்து என்றும் முஸ்லீம் என்றும் அடையாளத்தால் கண்டு பிடிக்க பிரியப்பட முடியாதபடி சமூக வாழ்வில் ஒன்று சேருங்கள். நம் வேஷப் பிரிவினையே பார்ப்பனர் இம்மாதிரி மக்களை நிரந்தரமாய் பிரித்துவைக்க இடமேற்பட்டது.

மதம் வேஷத்தில் வேண்டாம்

மதமும் கடவுளும் அவனவன் மனத்தில் நடத்தையில் இருக்கட்டும், வேஷத்தில் வேண்டாம் என்பதே நமது கருத்து. ஆதலால் நமக்குள் இந்து என்றும் முஸ்லீம் என்றும் தீண்டப்படாதவர்கள் என்றும் மேல்ஜாதி என்றும் கீழ்ஜாதி என்றும் கருதுகிற உணர்ச்சி கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். கொடுப்பனை கொள்வனை உண்பன தின்பன ஆகியவைகள் அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்ததாய் இருக்கட்டும், அதற்கு மேல்கண்டவைகள் தடையாய் இருக்க வேண்டாம். மேல்நாடுகளில் முஸ்லீம் நாடு உள்பட எல்லா நாடும் இப்படித்தான் இருப்பதைப் பார்த்தேன். அதனால் அந்த நாடுகளில் உள் ஜாதிச்சண்டை இல்லை; முன்னேற்றமடையவும் வசதி இருக்கிறது.

குறிப்பு: 06.12.1937 ஆம் நாள் பாலக்காட்டை அடுத்த புதுநகரம் முஸ்லீம் லீக் ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 12.12.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: