பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும் எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை, முதலிய காரியங்களும் பெயர்களும் சொல்லுவதுண்டு.

இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுவதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் அதாவது இம்மையில் இவ்வுலகில் யுக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவை களும், மறுமையில் மேல்லோகத்தில் பாவமன்னிப்பு, மோக்ஷம், நல்ல ஜன்மம் முதலியவைகளும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள் தான் பிரார்த்தனைக் காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்த பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவ பலிகொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும்.

ஆகவே இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்லவேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது.

படித்துப் பாஸ் செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டு மென்றால், "மோக்ஷத்துக்கு" போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோக்ஷத்துக்கு போக வேண்டும் என்றால், இவைகளுக்கெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலிகேட்கும் பெரும் சோம்பேறித் தனமும் மோசடியும் என்றும் சொல்வதுதான் மிகப் பொருத்தமாகும்.

பேராசையும் சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லா விட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.

மற்றும் முன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும் பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும் முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி அதை ஏமாற்றச் செய்யும் சூக்ஷி என்று கூட சொல்லி ஆகவேண்டி இருக்கிறது.

எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம்.

அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனையடைய எதிர் பாராமல் காரியத்தை செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்கவேண்டும் என்று கருதினால் கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு "அறிவாளி" என்றும் தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக் காரனென்றும் தானே சொல்லவேண்டும்.

தவிர இந்த பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனை சோம்பேறி யாக்குவதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசென்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக்கொண்டு போகிறவனுக்கும் யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

கடவுள் சகலத்தையுமுணர்ந்து அதற்கு தகுந்தபடி பலன் கொடுக்கக் கூடிய சர்வஞ்த்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதி இருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் ஈடுபடவோ அதற்காக நேரத்தை செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணியமாட்டான்.

ஏனென்றால் சகல காரியமும் கடவுளால் தான் ஆகும் என்று நினைத்துக்கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும் எண்ணத்துக்கும் தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்து இருந்த ஒருவன் அந்த தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.

சாதாரணமாக மக்களில் 100க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான அறிவற்ற வியாபாரத் தனமான முறையில் இருந்து வருகிறது.

அதாவது எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன். அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்கு பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது.

இவர்கள் எல்லோரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளை புத்திசாலி என்றோ சர்வ சக்தி உள்ளவன் என்றோ பெரிய மனிதத்தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆகவேண்டும்.

சிலர் சொல்லுகிறார்கள். மனிதன் பாபி, அவன் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான். ஆதலால் மன்னிப்பு கேட்டுதான் தீரவேண்டும் என்கிறார்கள்.

நான் பாபம் செய்துதான் தீருவேன். நீ மன்னித்துதான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதை கடவுள் ஏற்றுக்கொள்வதானால் மனிதன் எந்தப் பாவத்தை செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்கு புலப்பட வில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அருத்தம் தான் என்ன?

ஆகவே கடவுள் கற்பனையை விட இந்த பிரார்த்தனை கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் போய்விடும்.

மனிதன் பூஜையும் பிரார்த்தனையும் செய்வதற்கு தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய கடவுளுக்கு ஆக பூஜையும் பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை.

குரு (பாதிரி) புரோகிதன் (பார்ப்பனர்) ஆகியவர்கள் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.

இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப்பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கையும் எண்ணமும் "சித்திரபுத்திரனுக்கோ கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது" இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும் எமதர்ம ராஜாவும் இருந்தே இருக்கிறான்.

மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும் புரோகிதனும், பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப்போல் மனிதன் வீணாய்க்கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது? என்பவைகளை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ பயனற்ற காரியம் என்றோ அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை ஜனவரி 1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: