நாசிக்கில் விச்சிராம் யாதவன் என்ற ஆதிதிராவிட சிறுவன் ஒருவன் தான் தோட்டியாய் இருப்பதில் அவமானமும், வெறுப்பும் அடைந்து தற்கொலை செய்து கொண்டான். இதை பார்ப்பனர்கள் "அச்சிறுவன் மதம் மாறுவதற்கு இஷ்டப்படாமல் தற்கொலை செய்து கொண்டான்" என்று எழுதி திரித்துக் கூறி இப்போது இந்து மதத்திலிருந்து மதம் மாறவேண்டும் என்கின்ற உணர்ச்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஏற்பட்டிருப்பதை அடக்க அதை ஒரு சூழ்ச்சியாய்க் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் அயோக்கியத்தனத்தைக் காட்ட மற்றொரு உதாரணமேயாகும்.

விச்சிராம் யாதவன் என்கின்ற தோட்டிக்கு வயது 18. அச்சிறு வயதிலேயே அவனுக்கு தோட்டி வேலை பிடிக்கவில்லை என்பது இயற்கையேயாகும். அதற்காக அவனுக்கு வேறு மார்க்கமும் இல்லை. ஜாதி இழிவும், ஜாதி தொழில் கொடுமையும் நீங்குவதற்காக அச்சமூகத் தலைவர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாயின. அது சம்மதமாய் இந்துத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் பொய்யாயின.

கடைசியாக அவர்கள் (இந்துத் தலைவர்கள்) தீண்டாதவர்கள் பேரால் பணம் வசூலித்து வயிறு வளர்க்க ஆரம்பித்ததையும், இனியும் பலர் அதை ஒரு ஜீவனோபாயமாகக் கொண்டு இருப்பதையும் பார்த்த பின்பு இனி இந்து மதத்தில் இருப்பது கூடாது என்று முடிவு செய்து கொண்டான்.

மதம் மாறுவதால் பயன் ஏற்படாது என்று இந்து மத விஷமக் காரர்களும், அயோக்கியர்களும் செய்த பிரசாரத்தையும் நம்பிவிட்டான்.

ஆகவே இந்த இழிவிலிருந்து நீங்க வேண்டுமானால் செத்துப் போனால்தான் முடியும் என்று கருதி உயிர் விட்டு விட்டான்.

மதம் மாறுவது குற்றம் என்று அச்சிறுவன் கருதி இருப்பானேயானால் அவன் உயிர்விட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவன் குஷாலாக இந்து தோட்டியாகவே இருந்து கொண்டிருக்கலாமல்லவா? அவனை மதமாறும்படி யாரும் நிர்பந்தப்படுத்தவில்லை என்பதோடு எந்த மதத்தாரும் அவனை அழைக்கவுமில்லை.

இந்து மதத்தில் தீண்டாதவனாய் இருப்பதும், தோட்டியாயிருப்பதும் மதம் மாறுவதைவிட மேலான காரியம் என்று அவன் கருதி இருப்பானே யானால் ஒருக்காலும் செத்து இருக்கமாட்டான், மற்றவர்களுக்கு மதம் மாற வேண்டாம் என்று எடுத்துச் சொல்லி பெரிய சாமியாராயிருப்பான். அப்படிக்கில்லாமல் மதம் மாறுவதை விட பிராணனை விடுவது மேல் என்று கருதினான் என்பது உண்மையானால் இப்போது அவனைப்போல் அனேகர் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள்.

தீண்டப்படாதவர்களாய் தோட்டிகளாய் இருப்பதை விட உயிர் விடுவது மேல் என்று பலர் கருதுவதாலேயே அனேகர் பல கோடிப் பேர்கள் இந்த ஆயிரம் வருஷமாக வேறு மதம் மாறி சமூகத்தில் சுதந்திரமும் சுயமரியாதையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

மற்றும் பலர் இப்போது மதம் மாறவேண்டும் என்று தீர்மானித்து வருகிறார்கள்; மதம் மாறியும் வருகிறார்கள்.

கொச்சி, திருவாங்கூர் ராஜ்ஜியங்களில் தீயர், ஈழவர் சமூகத்தார் நேற்றுக்கூட மகாநாடு கூடி இந்து மதத்தில் இருந்து விலகுவது என்று தீர்மானித்து விட்டார்கள். நாசிக்கிலும் அனேக ஆதிதிராவிட சாமியார்கள் சாதுக்கள் ஆகியவர்கள் மகாநாடு கூடி மதம் மாறுவதாக தீர்மானித்து இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் கல் மனப் பார்ப்பனர்கள் இவற்றிற்கு போக்கிரித்தனமாகவும், விஷமத்தனமாகவும் வியாக்கியானம் செய்வதன் மூலம் மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்களே ஒழிய இக்கொடுமைக்கு எவ்வித பரிகாரமும் செய்ய முன் வந்தவர்கள் அல்லர்.

ஆகவே தீண்டாமை ஒழிய வேண்டுமானால் சுயமரியாதை உள்ளவர்கள் விச்சிராம் யாதவனைப் போல் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், தற்கொலை செய்துகொள்ள இஷ்டமில்லையானால் இந்துமதத்தை விட்டு தீண்டாமை இல்லாத மதம் புகவேண்டும். இரண்டும் இல்லாமல் தீண்டாதவனாய் பறையனாய், சக்கிலியாய், தோட்டியாய் இருந்து உயிர் வாழ்வது சுயமரியாதை அற்றதன்மை என்பதோடு பார்ப்பனர்களிடம் கூலி பெற்று மதம் மாறவேண்டாம் என்று தன் சமூகத்தாருக்கு சொல்லுவது தோட்டி வேலை செய்து ஜீவிப்பதைவிட இழிவான காரியம் என்று கூறுவோம்.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 22.03.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: