மதம் என்பது கடவுளாலும் கடவுள்களால் அனுப்பப்பட்டவர்களாலும் கடவுளை அடைவதற்கும், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்மந்தத்தை விளக்குவதற்கும் ஏற்பட்டவைகள் என்பது ஒரு சாராரின் அபிப்பிராயம்.

மனிதன் நடந்து கொள்ள வேண்டியதற்கு ஆக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் விதிகள் திட்டங்கள் என்பதுதான் மதம் என்பது மற்றொரு சாராரின் அபிப்பிராயம்.

எப்படி இருந்தாலும் சுயமரியாதைக்காரர்கள் மதம் என்பதைப்பற்றி கொண்டுள்ள அதப்பிராயம் பலர் அறிந்ததேயாகும். நிர்ப்பந்தமான அல்லது மூடநம்பிக்கையானதும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் சாத்தியத்துக்கும், மாறானதும் பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சி அல்லது விஞ்ஞானத்திற்கும் எதிரானதுமான காரியங்களையோ கருத்துக்களையோ ஆதாரங்களையோ ஏற்றுக்கொண்டு இருப்பதே மதம் என்றும், அது எதுவானாலும் அப்படிப் பட்ட மதங்களையே சுயமரியாதைக்காரர்கள் மறுக்கிறார்கள் என்பதோடு அம்மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

சாதாரணமாக இன்று இந்தியாவில் பெரும்பான்மையான அதாவது 100க்கு 95 பேர்களுக்கு மேலாகவே உள்ள மக்களை ஆவாகனம் செய்து கொண்டிருக்கும் மதங்களாகிய இந்து மதமும் மற்றும் சீர்திருத்த மதங்கள் என்பவையாகிய இஸ்லாம், கிறிஸ்து, ஆரிய சமாஜம், பிர்மசமாஜம், முதலிய பல மதங்களும் நிர்பந்தமான நம்பிக்கை (அதாவது நம்பித்தான் தீரவேண்டும் என்பது) அல்லது மூடநம்பிக்கை அல்லது கொள்ள முடியாததும் ஆதார மில்லாததுமான விஷயங்களில் நம்பிக்கை வைத்தல் ஆகியவைகளையோ அல்லது இவற்றில் சிலவற்றையோ கொண்டதாகத் தான் காணப்படுகின்றன.

சரீரம் வேறு, ஆத்மா வேறு என்றும், கடவுள் வேறு ஆத்மாவேறு என்றும், அது மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்புடையது என்றும் மனிதனையும் கடவுளையும் ஒன்று சேர்ப்பது என்றும், சரீரத்தின் கூட்டுறவால், அதன் தூண்டுதலால் ஆத்மா செய்த குற்றத்துக்கு கடவுளுடைய தண்டனைகள் ஆத்மாவுக்கு மாத்திரம் தான் கிடைக்கும் என்றும், இறந்த பிறகு அதாவது சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்த பிறகு தீர்ப்பு நாளில் மறுபடியும் ஒரு சரீரத்தைப் பெற்று சித்திர புத்திரன் கணக்குப்படி தண்டனைகள் கண்டனைகள் அடையும் என்றும், செத்தவர்கள் மறுபடியும் பிறப்பார்கள் என்றும், ஒரு ஆத்மாவுக்கு பல ஜன்மங்கள் உண்டு என்றும், அந்த ஜன்மங்கள் எல்லாம் ஆத்மாவும், சரீரமும் கலந்து இருந்த காலத்தில் செய்த காரியத்துக்கு ஏற்ற விதமாகக் கிடைக்கும் என்றும், இப்படி இன்னும் எவ்வளவோ விஷயங்களைக் கொண்டவைகளே இன்று செல்வாக்குள்ளதும் இந்நாட்டில் 100க்கு 95 பேர்களுடையதுமான மதங்களாய் இருக்கின்றன.

இப்படிப்பட்ட மதங்களைத் தான் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஒப்புக் கொள்ளவும் முடியாது என்பதோடு இந்த மதங்களிலிருந்து மக்கள் விடுபட்டு அறிவுச் சுதந்திரவாதிகளாக பகுத்தறிவுவாதிகளாக ஆக வேண்டும் என்பது சுயமரியாதைக்காரர்களின் முக்கிய லக்ஷ்யமாகும்.

அது போலவே உலக நடப்புக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக கடவுள் என்கின்ற ஒரு வஸ்து இருக்கிறது என்பதையும், அது மக்கள் தீண்டப்படாதவர்கள் ஆவதற்கும், மக்களை மேல் ஜாதிக்காரர்கள், முதலாளிகள், அரசர்கள் என்பவர்கள் கொடுமைப்படுத்துவதற்கும் காரணமாயும் மனிதனுக்கு ஆக உலகில் உள்ள ஜீவராசிகள் ஆடு, மாடு, பன்றி, கோழி, பக்ஷிகள், மச்சங்கள் முதலாகியவைகள் சிருஷ்டிக்கப்பட்டது என்பதற்கும் காரண கர்த்தாவாயும் இருக்கிறது என்பதையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

மற்றும், அக்கடவுளே எரிமலை, பூகம்பம், புயல்காற்று, வெள்ளக் கொடுமை ஆகியவைகளுக்கு கர்த்தாவாகவும் விஷஜுரம், தொத்து நோய், கொள்ளை நோய், குறை நோய், உளைமாந்தை ஆகிய வியாதிகளுக்கும், தேள், பாம்பு முதலிய விஷக்கிருமிகளுக்கும் புலி, சிங்கம், ஓநாய், நரி முதலிய துஷ்ட ஜெந்துக்களுக்கும், சிருஷ்டி கர்த்தாவாகவும் எலியைப் பூனை தின்பதற்கும், ஆட்டைப் புலி தின்பதற்கும், புழுப்பூச்சிகளை பட்சிகள் தின்பதற்கும், பட்சிகளை வேடர்கள் வேட்டையாடுவதற்கும் காரணகர்த்தாவாயும் இருக்கிற கடவுளையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கர்த்தாவையும் ஒழிக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

மேலும் வேறு எப்படிப்பட்ட கடவுளானாலும் அதை வணங்கினால், அதற்கு ஆகாரம், நகை, துணி, பெண்ஜாதி, வைப்பாட்டி முதலியவை வைத்து பூஜைசெய்தால், உயிர்பலிகொடுத்தால், இன்ன இன்ன மாதிரி தொழுதால், ஸ்தோத்திரித்தால் ஜபித்தால் மனிதன் செய்த எல்லா கெட்ட காரியங்களின் பாபங்களையும் மன்னித்துவிடுவார் என்கின்ற கடவுளையும் ஒப்புக் கொள்ளாததோடு அப்படிப்பட்ட கடவுளுணர்ச்சியையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.

கடவுளைப்பற்றிய மற்ற விஷயத்தை மற்றொரு சமயம் விவரிப்போம்.

மதம் என்னும் விஷயத்தில் மேலே குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட மதங்கள் இருக்கக்கூடாது என்பது தான் சுயமரியாதைக்காரர்களின் மத சம்பந்தமான அபிப்பிராயமாகும்.

ஏன் இதை முதலில் குறிப்பிடுகிறோம் என்றால் விவகாரங்களுக்கு வரும்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள் தங்கள் மதங்களுக்கு வெவ்வேறு தத்துவம் இருப்பதாகவும், சகலவிதமான பகுத்தறிவு பரீக்ஷைகளுக்கும் தங்கள் மதம் நிற்கும் என்றும் சொல்லி வாதாடும் போது சமயத்துக்குத் தகுந்தபடி பேசுவதால் நிலைமை கஷ்டத்திற்கு உள்ளாகிறது. ஆகையால் மதங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பல மதங்களுக்கும் உள்ள பொதுக் கொள்கைகளையே குறிப்பிட்டோம்.

மற்றும் மதம் என்னும் வார்த்தைக்கு பலவித அருத்தங்களும், கருத்துக்களும் சொல்லப்படுகின்றன.

உதாரணமாக ஒருவர் "என்னுடைய மதம் யார் மனதையும் புண்படுத்தாமலும் யாருக்கும் என்னால் கூடிய நன்மை செய்வது தான்" என்று சொல்லுகிறார்.

மற்றொருவர் "என்னுடைய மதம் கடவுளைப்பற்றி கவலைப்படாத நாஸ்திக மதம் தான்" என்கின்றார்.

மற்றொருவர் "என்னுடைய மதம் கடவுள் இல்லை; ஆத்மா இல்லை. ஆனால் கர்மத்துக்குத் தகுந்த பலன் உண்டு" என்பது தான் என்கிறார்.

மற்றொருவர் "நான் கருதியிருக்கும் மதம் திமிர் அல்லது கொழுப்பு" என்கிறார்.

மற்றொருவர் "மதம் என்னும் வார்த்தைக்கு கொள்கை அல்லது கடமை" என்பது தான் அர்த்தம் என்கிறார்.

மற்றொருவர் "என்னுடைய மதம் விஞ்ஞானம்" என்கிறார்.

மற்றொருவர் "என்னுடைய மதம் மனித ஜீவ அபிமானம்தான்" என்கிறார். மற்றொருவர் "என்னுடைய மதம் பொதுவுடமை கொள்கை" என்கிறார். இப்படியே இன்னும் பலவிதமாய் மதம் என்னும் வார்த்தைக்கு தனித்தனி கருத்துக்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் அவைகளைப்பற்றி யெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம்.

ஆனால் முகப்பில் கூறிய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதங்களின் அஸ்திவாரம் ஒன்றுபோலவே இருந்தாலும் அதன் மேல் கட்டப்பட்ட கட்டடங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம்.

ஒருவன் உண்மையாகவே மதம் இல்லாமல் இருப்பது நாஸ்திகம் என்று கருதிக்கொண்டு ஏதாவது ஒரு மதத்தின் பேரால் உயிர் வாழ வேண்டியவனாய் இருக்கிறான்; ஆதலால் எப்படியாவது தான் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க வேண்டும். மற்றப்படி மதக்கொள்கைகள் எது எப்படி இருந்தாலும் தான் லக்ஷியம் செய்வதில்லை என்கின்ற கருத்தின் மீதே தனக்குள் எவ்விதக் கொள்கையும் இல்லாமல் ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு மத வேஷத்தைப் போட்டுக்கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.

மற்றும் பலரும் அதுபோலவே மதங்களுக்கு உள்ள செல்வாக்குக்கு பயந்து கொண்டு மத வேஷக்காரர்களாய் இருக்கிறார்கள். பரத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருப்பது போலவே இகத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருக்கிறார்கள்.

விளக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பணத்துக்கு ஆகவும், பெண்ணுக்கு ஆகவும், வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவும், உத்தியோகத்துக் காகவும் எத்தனையோ பேர் மதவாதிகளாகவும், மதமாற்றக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

பொதுவாக பார்க்கப்போனால் கடவுள் ஏற்பட்ட வெகு காலத்துக்கு பிறகுதான் மதம் ஏற்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய கடவுளும் மதமும் இரட்டைப்பிள்ளைகள் போல் பிறந்தவைகள் அல்ல.

எப்படி இருந்தாலும் மதங்களானவை இன்று சடங்காகவும் வேஷமாகவும் இருக்கின்றனவே ஒழிய கொள்கையாகக் கூட எந்த மதமும் அனுபவத்தில் இருக்கவில்லை. புஸ்தகங்களில் பல கொள்கைகள் இருந்திருக்கலாம்; இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். காரியத்தில் அக் கொள்கைகள் பெரிதும் அமுலில் இல்லை.

ஆகவே அமுலில் இல்லாத கொள்கைகளைக் கொண்ட மதங்களில் எந்த மதம் மேலானது என்றோ, எந்த மதக் கொள்கை மேலானது என்றோ வாதிப்பதானது ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோட்டைகளில் எது பலமான கட்டடம் என்றும், எது வசிப்பதற்கு சவுகரியமானது என்றும் கேட்பதுபோல் தான் ஆகும்.

முதலாவதாக ஒரு மதத்துக்கு கொள்கைகள் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால் அதற்கு இரண்டு சக்தி இருக்க வேண்டும்.

அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்கவேண்டும். அதோடு கூடவே அக்கொள்கைகள் எல்லா மக்களாலும் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் தானாகவே பின்பற்றித் தீரவேண்டியதாகவும் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தத்துவங்களைக் கொண்ட கொள்கையை இதுவரை எந்த பெரியவரும் கண்டுபிடிக்கவுமில்லை. எந்த மதமும் கொண்டிருக்கவும் இல்லை.

அது செய்தால் பாவம் இது செய்தால் மோக்ஷம் என்றும், அது செய்தால் லாபம் இது செய்தால் நஷ்டம் என்றும், அது செய்தால் தண்டனை இது செய்தால் தூக்கு என்றும், இப்படியாக பல நிர்ப்பந்தங்கள், பயம், தண்டனை கண்டனை ஆகியவைகளின் பாதுகாப்பால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளாகவும் அமுலில் கொண்டுவர எப்போதுமே முடியாததாகவும் அமுலில் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட வேண்டியதாகவும் மனிதனால் சாதாரணமாக செய்யக்கூடியதும் செய்வதற்கு ஆசையுண்டாக்கக் கூடியதும் அல்லாததாகவும் இருக்கக்கூடிய கொள்கைகளையேதான் எந்த மதமும் கொண்டிருக்கிறது.

எந்தக் கொள்கையாவது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகவோ அல்லது கடவுளுக்கு இஷ்டமானதாகவோ இருந்திருக்குமானால் அது மக்களுக்கு மிகவும் இஷ்டமானதாகவும், செய்வதற்கு மிகவும் ஆசை யுடையதாகவும், சுலபத்தில் செய்து முடிக்கக்கூடியதாகவும் இருந்திருக்க வேண்டாமா? கடவுளுக்கு இஷ்டமான கொள்கை மனிதனுக்கு கசப்பானதாகவும், பெரும்பான்மையோருக்கு செய்வதற்கு முடியாததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

ஆகவே கடவுளின் பேரால் மதத்தின் மூலம் மத கர்த்தாக்களால் சொல்லப்பட்ட கொள்கைகள் என்பவை சொன்னவர்களுக்கு அவர்களது புத்தித்திறமையும், அக்காலத்துக்கு சரி என்று பட்ட கருத்துக்களையும் கொண்டவைகளே தவிர எந்தக் கொள்கையும் எந்தக் கடவுளாலும் சிருஷ்டிக்கப்பட்டதல்லவென்றே சுயமரியாதைக்காரர்கள் கருதுகிறார்கள்.

இன்றும் மதமானது மக்களின் கூட்டு வாழ்க்கையின் அவசியத்துக்கு ஏற்ற கொள்கைகளைக் கொண்டது என்பதுடன் அவை பகுத்தறிவுக்கு ஒத்ததாகவும், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திருத்திக் கொள்ளக் கூடியதாகவும், சகல மக்களுக்கும் பலன் ஒன்றுபோல் உண்டாகக்கூடிய தாகவும் இருக்கத்தக்க கொள்கைகள் கொண்டது என்றால் அதை சுயமரியாதைக்காரர்கள் மறுப்பதற்கு முன்வரமாட்டார்கள்.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை மார்ச்சு 1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: