"மநுதர்ம சாஸ்திரம்" என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்ட திட்டங்களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். அதில் உள்ள நீதிகளும், விதிகளும், எந்த விதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவது அவசியமாகும். ஆதிதிராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தார்கள் வரை இந்த மநுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்து மதத்தில் இருப்பதைவிட பிறமதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக்கொள்வது சரியா? பிசகா? என்பதையும், அல்லது இம்மாதிரியான அநீதியான சட்ட திட்டங்கள் அமைந்துள்ள "இந்து" மதத்திலேயே அடிமைப் பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1. "பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம் சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது". அத்தியாயம் 8, சுலோகம் 20.

2. "சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடையதாயிருக்கும்". அ.8. சு.22.

3. "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி". அ.8. சு.22.

4. "ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை". அ.8 சு.112.

5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்லச் செய்ய வேண்டும்; பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர்போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணரவேண்டும்". அ.8. சு.113 115.

6. "சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்". அ.3. சு.270.

7. "சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளைச் சொல்லித் திட்டினால், 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்". அ.8. சு. 271.

8. "பிராமணனைப் பார்த்து "நீ இதைச் செய்ய வேண்டும்" என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்". அ.8. சு.272.

9. "சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்." அ.8. சு.281.

10. "பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை." அ.8. சு.143.

11. "சூத்திரன் பிராமணப் பெண்னைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்".

"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும் எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்." அ.8. சு.380.

12. "அரசன், சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிடவேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்". அ.8. சு.410.

13. "பிராமணன் கூலி கொடாமலேயே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான்". அ.8. சு.413.

14. "பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாகமாட்டான்". அ.8. சு.417.

15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேரவேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது". அ.9. சு.416.

16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை". அ.8. சு.155.

17. "பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தன் இஷ்டப்படி கொள்ளையிடலாம்". அ. 9. சு. 248.

18. "பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்". அ.9. சு.317.

19. "பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவார்கள்". அ.9. சு.313.

20. "பிராமணனிடமிருந்து க்ஷத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பஞ்செய்தால், அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்". அ.9. சு. 319, 320.

21. "சூத்திரனுக்கு பிராமணப் பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்யவேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன் பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால் களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக்கொள்ள உரிமையுண்டு". அ. 11. சு.12.

22. "சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்". அ.11. சு.13.

23. "யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது" அ.11. சு.20.

24. "பெண்களையும், சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்". அ. 11. சு.66.

25. "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்". அ. 11. சு.131.

25. (அ) "அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது". அ. 11. சு. 132.

26. "க்ஷத்திரியன் இந்நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்". அ. 11. சு. 285.

27. "சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவான்; பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனே யாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்". அ.11. சு.75.

28. "பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால், அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்". அ.10. சு.96.

29. "சூத்திரன் இம்மைக்கும் மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்". அ. 10. சு.96.

30. "பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், கெட்டுப்போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்குக் கொடுக்கப்படும்". அ.10. சு.125.

31. "சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக்கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்க விட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்". அ. 10. சு.129.

32. "மனுவால் எந்த வருணத்தானுக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்". அ. 2 சு.7.

இன்னும் இவை போன்ற ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும் ஒரு சாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால், "பிராமணன்" என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை "மனுதர்மம்" என்று கூறுவதா அல்லது "மனு அதர்மம்" என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.

குடி அரசு துணைத் தலையங்கம் 05.04.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: