வினா: மனிதன் என்றால் என்ன?

விடை: பகுத்தறிவுள்ள ஒரு பிராணி.

வினா: மனிதன் தோன்றி எவ்வளவு காலமாயிற்று?

விடை: லட்சக்கணக்கான வருஷங்களாயிற்று.

வினா: அவனுடைய பூர்வீகர் யார்?

விடை: முலையுண்ணும் பிராணிகள்.

வினா: அது உனக்கு எப்படித் தெரியும்?

விடை: மக்கள் உறுப்புகளின் அமைப்பு, கலப்பு, வேலை முறை முதலியவைகளைக் கவனித்தால் மனிதனும் ஒரு பிராணிக்கு ஒப்பாகவே இருக்கிறான்.

வினா: மனிதனுக்கும் பிராணிகளுக்கும் பொதுவாக இருக்கும் சில அம்சங்களை விளக்கிச் சொல்.

விடை: மற்றப் பிராணிகளுக்கு இல்லாத தசை நாரோ, எலும்போ, உறுப்புகளோ மனிதனுக்கு இல்லவே இல்லை.

வினா: இவ்வளவுதானா?

விடை: மனித உடலும் மிருக உடலும் ஒரே மாதிரிப் பொருள் களாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு உடல்களிலும் ஒரே மாதிரியான அங்க அமைப்பே காணப்படுகின்றன. இரண்டு உடல்களும் ஒரே மாதிரியான ஜனன மரண விதிகளுக்கே கட்டுப்பட்டிருக்கின்றன.

வினா: இதர பிராணிகளுக்கும் மனிதனுக்கும் ஏதாவது வித்தியாச முண்டா?

விடை: அறிவிலும் ஒழுக்கத்திலும் மனிதன் மற்றப் பிராணிகளுக்கு மேலானவனாயிருக்கிறான்.

வினா: வேறு வித்தியாசங்கள் உண்டா?

விடை: பசிப்பிணியைத் தணிக்க மட்டுமே பிராணிகள் முயற்சி செய்கின்றன. மனிதன் தன் லட்சியங்களை அடைய முயல்கிறான்.

வினா: வேறு ஏதாவதுண்டா?

விடை: தன் சந்ததிகளுக்கும் எதிர்காலத்தில் பிறக்கப் போகிறவர் களுக்கும் க்ஷேமமுண்டாகும்படி மனிதன் வாழ்ந்து உழைக்கிறான்; மிருகங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய உணர்ச்சியே இல்லை.

வினா: மனிதனுக்கும் மிருகங்களுக்கு முள்ள சம்பந்தம் என்ன?

விடை: அவன் மிருக வர்க்கத்திலிருந்து தோன்றினான். அல்லது மிருக வர்க்கத்திலிருந்து அபிவிருத்தியடைந்தான்.

வினா: மனிதன் மிருக வருக்கத்திலிருந்து தோன்றி அபிவிருத்தி யடைந்தான் என்பதற்கு முக்கியமான ஆதாரமென்ன?

விடை: மனிதக் கரு உயிர்பெறும் முன்பு பல நிலைமை அடை கின்றன. அப்பொழுது அதற்கு மீன்களுக்கு இருப்பது போன்ற மூச்சுக் கருவிகளும் வாலும், பெரிய கால் விரல்களும், உரோமம் அடர்ந்த உடலும், குரங்குக்கு உள்ளது போன்ற மூளையும் இருக்கின்றன.

வினா: அதன் பொருள் என்ன?

விடை: அந்த நிலைமையை எல்லாம் கடந்தே மனிதன் தற்கால உருவத்தை அடைந்தான் என்பதே பொருள்.

வினா: தற்காலம் காணப்படும் மிருகங்களைப்போல் மனிதனும் ஒரு காலத்திலே மிருகமாயிருந்தான் என்று நீ கூறுகிறாயா?

விடை: நெடுங்காலம் அவன் குரங்கைப் போலவும் கொரில்லாக் குரங்கைப் போலவும், பெரிய வாலில்லாக் குரங்கைப் போலவும் இருந்து வந்தான்.

வினா: எந்தக் காலத்தில் அவன் அவ்வாறு இருந்தான்?

விடை: திட்டமாகக் கூற முடியாது. ஒருகால் லக்ஷேõபிலக்ஷம் வருஷங்களுக்கு முன் இருக்கலாம்.

வினா: அப்படியானால் மனிதன் பிரத்தியேகமாக சிருஷ்டிக்கப் படவில்லையா?

விடை: இல்லை. அவன் கீழ்த்தரப் பிராணியாக இருந்து நாளா வட்டத்தில் முன்னேறினான்.

வினா: மிருகம் மனிதனாக மாறுவதை யாராவது எப்பொழுதாவது கண்ணாரக் கண்டதுண்டா?

விடை: இல்லை. இயற்கை இரகசியமாக வேலை செய்கிறது. குறிப்பிட்டுணர முடியாத பல பருவங்களைக் கடந்து காலக்கிரமத்தில் சிறுகச் சிறுக மனிதன் கீழ்த்தரப் பிராணியிலிருந்து முன்னேற்றமடைந்திருக்கிறான்.

வினா: அவனது உடல் மட்டுந்தானா இவ்வாறு முன்னேற்றமடைந்து வளர்ச்சியடைந்திருக்கிறது?

விடை: இல்லை. அவனது உடலைப்போலவே அவனது மனம் அல்லது பகுத்தறிவும் காலக்கிரமத்தில் சிறுகச் சிறுக முன்னேற்றமடைந்து வந்திருக்கிறது.

வினா: எல்லாப் பிராணிகளும் முன்னேற்றமடைந்து ஏன் மனிதராக வில்லை?

விடை: எந்தக் காரணத்தினால் காட்டாள ஜாதியாரெல்லாம் நாகரிக மக்களாகவில்லையோ அந்தக் காரணத்தினாலேயே மிருகங்கள் எல்லாம் மக்களாக முன்னேற்றமடையவில்லை.

வினா: அந்தக் காரணம் எது?

விடை: சாதகமான நிலை.

வினா: அதை விளக்கிக் கூறு.

விடை: தேவையே முன்னேற்றத்துக்கு அடிப்படை. சுகமாக வாழ முடியும்வரை மிருகங்களும் காட்டாளர்களும் அந்த நிலைமையிலேயே இருக்கின்றன. ஆபத்துகளினாலோ மரணத்தினாலோ பயமடையும் போதுதான் அவைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளப் புது மார்க்கங்களைக் கண்டுபிடிக்க முயல்கின்றன.

வினா: இதைக் கொஞ்சங் கூட விளக்கிக்கூறு.

விடை: சந்தர்ப்பங்கள் அல்லது நிலைமையத் தழுவியே மனிதன் அல்லது மிருகத்தின் வாழ்க்கை உருப்பெறுகிறது. சந்தர்ப்பங்கள் அல்லது நிலைமையில் மாற்றமேற்படும்போது மனிதன் அல்லது மிருகத்தின் நிலைமையிலும் மாற்றமேற்படுகிறது.

வினா: மனித முன்னேற்றத்துக்கு முக்கியமாக உதவி புரிந்தது எது?

விடை: ஜீவிதப் போராட்டமே மற்றவைகளை விட அதிகமாக உதவி புரிந்தது.

வினா: மனித உற்பத்தியைப் பற்றி வேறு ஏதாவது அபிப்பிராய முண்டா?

விடை: உண்டு. ஆறாயிரம் வருஷங்களுக்கு முன் கடவுள் மனிதனை நினைத்த மாத்திரத்தில் உத்தமனாக சிருஷ்டித்ததாக அநந்தம் பேர் நம்பி வருகிறார்கள்.

வினா: உத்தமனாக சிருஷ்டித்தான் என்பதின் பொருள் என்ன?

விடை: கடவுளைப் போலவே மனிதன் தோற்றுவிக்கப்பட்டானாம்.

வினா: மனிதன் ஒரு காலத்து கடவுளைப்போல உத்தமனா யிருந்தானென்று உரிமை பாராட்டப்படுகிறதா?

விடை: உரிமை பாராட்டப்படுவதாகத் தோன்றவில்லை.

வினா: அப்படியானால் கடவுளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் உத்தமன் அல்லவா?

விடை: இல்லை.

வினா: அப்படியானால் மனிதன் உத்தமனாக படைக்கப்பட்டான் என்று அவர்கள் ஏன் கூறுகிறார்கள்?

விடை: ஒரு மனிதனுக்கு எவ்வளவு உத்தமனாக இருக்க முடியுமோ அவ்வளவு உத்தமனாக மனிதன் இருந்தான் என்றே அவர்கள் நம்புகிறார்கள் என நினைக்கிறேன்.

வினா: இப்பொழுது அவன் ஏன் உத்தமனாக இருக்கவில்லை.

விடை: கடவுள் கட்டளையை அவன் மீறியதனால் உத்தமத் தன்மையை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

வினா: உத்தமனான ஒருவன் எவ்வாறு குற்றம் செய்வான்?

விடை: தன்னுடைய பெருமைக்காக அவன் குற்றம் செய்யும்படி சிருஷ்டி கர்த்தா அனுமதித்தாராம்.

வினா: அப்படியானால் அவன் கடவுள் கட்டளையை மீறாமல் கட்டளைப்படியே தான் நடந்தானா?

விடை: கடவுள் நோக்கத்தைப் பூர்த்தி செய்யுமாறு கடவுள் கட்டளைப்படியே அவன் நடந்தான்.

வினா: மனிதன் வீழ்ச்சியடைந்ததினால் ஏற்பட்ட பலன்கள் எவை?

விடை: எல்லா மக்களுக்கும் பாபம், துன்பம், மரணம் இவைகளே ஏற்பட்ட பலன்கள்.

வினா: மனிதன் வீழ்ச்சியடைவதற்கு முன் உலகத்தில் தீமையே இருந்ததில்லையா?

விடை: விஞ்ஞான சாஸ்திரப்படியும் பைபிலின்படியும் உலகத்தில் தீமை இருக்கத்தான் செய்திருக்கிறது. ஏனெனில் ஆதாம் பாவம் செய்யும்படி சாத்தான் தூண்டியதாக பைபிளில் கூறப்பட்டிருக்கிறது.

வினா: சாத்தானைப் பற்றிய பொதுவான நம்பிக்கை என்ன?

விடை: சாத்தான் கடவுளுக்கும் மனிதனுக்கும் பெரிய விரோதி என்று பொதுவாக நம்பப்படுகிறது.

வினா: வேறு என்ன?

விடை: கடவுள் நன்மைக்கு அதிகாரியாக இருப்பதுபோல் சாத்தான் தீமைக்கு அதிகாரியாக இருக்கிறானாம்.

வினா: பேய் எப்பொழுது முதல் இருந்துகொண்டு வருகிறது?

விடை: கடவுள் தோன்றியபோதே பேயும் தோன்றியிருப்பதாக சாமானிய ஜனங்கள் நம்புகிறார்கள்.

வினா: மக்கள் பேயை நம்பக் காரணம் என்ன?

விடை: மனித சமூகம் பாலிய தசையிலிருந்தபோது வெளிச்சத்துக்கும், இருளுக்கும், ஜீவனுக்கும், மரணத்துக்கும், அன்புக்கும், வெறுப்புக்கும் காரணம் கூறும் பொருட்டு நன்மை செய்ய ஒன்றும், தீமை செய்ய ஒன்றும் இருப்பதாகவும், அவை இரண்டுமே உலகத்தை அடக்கியாண்டு வருவதாகவும் நம்பிக்கொண்டது.

வினா: பேய் கடவுளைப்போல் அவ்வளவு புத்திசாலியா?

விடை: இல்லை. பெரிய தந்திரசாலியாம்.

வினா: பேயின் ஜீவித நோக்கமென்ன?

விடை: மக்களை கெட்ட வழியில் செலுத்திக் கெடுத்து கடவுள் வேலையை அழிப்பதே.

வினா: பேய் இருந்துகொண்டு இருப்பதற்குப் பொறுப்பாளி யார்?

விடை: பொதுவான நம்பிக்கை என்னவெனில் ஆதி மனிதனைப்போல் பேயும் உத்தமனாகவே இருந்ததாம். அது தானும் கடவுளாக வேண்டு மென்று எண்ணியதினால் அது சுவர்க்கத்திலிருந்து ஓட்டப்பட்டதாம்.

வினா: கடவுள் அந்தப் பேயை ஏன் அழிக்கவில்லை?

விடை: மனிதன் வீழ்ச்சியடைய எக்காரணத்தினால் கடவுள் அனுமதியளித்தானோ அக்காரணத்தினாலேயே கடவுள் பேயை ஒழிக்காமல் வைத்துக்கொண்டு இருக்கிறான்.

வினா: அதன் பொருள் விளங்கச் சொல்லு?

விடை: தன் பெருமையை நிலைநாட்டும் பொருட்டே கடவுள் பேயை உயிரோடு வைத்துக்கொண்டு இருக்கிறான்.

வினா: எப்பொழுதும் ஒரு நரகமும் பேயும் இருந்து கொண்டு தானிருக்குமா?

விடை: இருந்துகொண்டு இருக்குமென்று அநேகர் சொல்லுகிறார்கள்.

வினா: பேய்களைப் பற்றிய இம்மாதிரிக் கதைகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்.

விடை: அவர்கள் பெற்றோர் நம்பியதினால் அவர்களும் நம்புகிறார்கள்.

வினா: அந்த நம்பிக்கையைப்பற்றி நீ என்ன எண்ணுகிறாய்?

விடை: விஷயங்களை ஆராய்ந்து பாராதவர்கள் கூறும் அபிப்பிராயங் களுக்கும், கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பே இல்லை.

வினா: பேய் நம்பிக்கையினால் ஏற்பட்ட பலன் என்ன?

விடை: பேய் நம்பிக்கையினால் மக்கள் மூடபக்தியுடையவர் களாயும், சஞ்சலமுடையவர்களாயும், பயங்காளிகளாயும், குரூரர்களாயும் ஆகிவிடுகிறார்கள்.

வினா: பேய் நம்பிக்கை எப்படி ஒழியும்?

விடை: அறிவியக்கத்தினால் ஒழியும்

வினா: உலகத்திலேயே மிகவும் பயங்கரமானது எது?

விடை: பயந்தான்.

வினா: ஏன்?

விடை: பயம், ஹிருதயத்தையும் உடலையும் திமிராக்கி, தற்காப்புக் குள்ள சக்தியை அழித்துவிடுகிறது. தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள ஒருவனுக்கு சக்தியில்லாதாகும்போது அரசியல், சமயப் பூச்சாண்டிகளுக்கு அடிமைப்பட்டு விடுகிறான்.

குடி அரசு வினா விடை 26.04.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: