(நமது நிருபர்)                                     

தமிழ்நாடு இந்துமகாசபைத் தலைவர் டாக்டர் பி. வரதாஜூலு நாயுடு அவர்களும், திவான் பகதூர் கே.எஸ். ராமசாமி சாஸ்திரி அவர்களும் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களை இன்று காலை 10மணிக்கு “விடுதலை” ஆபீசில் சந்தித்தார்கள். பெரியார், இருவரையும் அன்புடன் வரவேற்று 45 நிமிஷ நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

குடிஅரசு - பெட்டிச்செய்தி -  01.12.1940

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) அடுத்து வரும், தமிழர்களை இழிவுபடுத்தும் பழக்க வழக்க ஆதாரங்களை ஒழிக்கும் போராட்டத்தில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்கெனவே சிறை சென்ற தாய்மார்களும் இந்தப் போராட்டத்திலும் தீவிரப் பங்கெடுப்பதுடன், சிறை செல்லவும் முன் வரவேண்டுமென தாய்மார்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2) 1941 பிப்ரவரி 26,27,28-ஆம் தேதிகளில் சென்சஸ் எடுக்க அரசாங்க ஏற்பாடு செய்திருப்பதால் அத்தேதிகளில் சென்சஸ் எடுக்கும்போது நாயுடு, முதலியார் முதலான ஜாதிப் பெயரைச் சொல்லாமல் ஆரியர் ஒரு ஜாதி தமிழர் ஒரு ஜாதி என்று சொல்லும்படி எல்லா மக்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

3) கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடுகிறவர்கள் அவர்கள் கொண்டு போகும் நைவோத்திய பொருள்களாகிய கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு முதலியவைகளை தாங்களே காட்ட வேண்டும். காசி, செகந்நாதம் போன்ற கோயில்களில் எல்லா மூலஸ்தானத்திலும் கடவுள் வடிவங்களைப் பூஜை செய்வதைப் போல தமிழர்களும் முன்காலத்தில் செய்து வந்தது செய்ய முற்பட வேண்டும்.

4) தோழர்கள் தாளமுத்து நடராஜன்  இந்தி எதிர்ப்பில் சிறை சென்று உயிர் நீத்தமைக்கு இம்மாநாடு அன்னார் குடும்பத்தினருக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

5) தோழர்கள் ராகவலு, தமிழர் தொண்டர் படைத் தலைவராக இருந்து அருந்தொண்டாற்றியவர். அகால மரணமுற்றதற்கு இம்மாநாடு ஆழ்ந்து அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

6) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வடமொழியில் கடவுள் வணக்க வாழ்த்து சொல்லுவதை நீக்க வெண்டுமென்று இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

7) பொதுத் தொகுதி முறையின் பயனாக திராவிடர் தமது அரசியல் உரிமைகளை ஆரிய சூழ்ச்சிக்கு இரை கொடுத்து விட்டதை கண் கூடாகக் கண்டதால், இனி வகுக்கப்படும் புதிய அரசியல் திட்டத்தில், திராவிடருக்குத் தனித் தொகுதி அமைக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

8) திராவிட இயக்கத் தளபதியாக இருந்து திராவிடர்களுக்கு அருந்தொண்டாற்றி வந்த சர். பன்னீர்செல்வம் அவர்கள் அகால மரணமடைந்ததற்கு மாநாடு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

9) இந்தி எதிர்ப்புப் போரைத் திறம்பட நடத்திய தலைவர்களுக்கும் போரில் ஈடுபட்டு சிறை சென்று பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்த தாய்மார்களுக்கும், தோழர்களுக்கும் அதற்காகப் பல வழிகளிலும் உதவி செய்து ஆதரித்த தோழர்களுக்கும் மாநாடு பாராட்டு அளிப்பதோடு உண்மையான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

10) திராவிடரின் மொழி கலை நாகரீகத்துக்குக் கேடு செய்யும் கட்டாய இந்தியை காங்கிரஸ் சர்க்கார் புகுத்திய போது அதை எதிர்த்த திராவிடரின் கிளர்ச்சியை மதித்து கட்டாய இந்தியை ரத்து செய்ததற்காக சர்க்காருக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

11) தற்போது நடந்து வரும் யுத்தத்தில், பிரிட்டிஷாருக்கு பூரண வெற்றி கிடைக்க வேண்டுமென்று கோருவதோடு, தமிழ் மக்கள் யுத்த முயற்சிக்கு சகல ஆதரவும் அளிக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

12) பொது ஸ்தாபனமாக ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்வே போர்டாரின் நிர்வாகத்தில் நடக்கும் ஓட்டல்களில், பார்ப்பனருக்கு வேறிடமும் பார்ப்பனரல்லாதாருக்கு வேறிடமுமாக, பிரித்து பேதப்படுத்தி இழிவுபடுத்தி வைத்திருக்கும் முறையை இம்மாநாடு பலமாகக் கண்டிக்கிறதுடன், சம்பந்தப்பட்ட இலாகாவுக்கு இக்கொடுமையை ஒழிக்கும்படி தேதி குறிப்பிட்டு இறுதிக் கடிதம் அனுப்பிவிட்டு, கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தீவிரக் கிளர்ச்சியைத் துவக்கி வைக்கவும், திட்டம் வகுக்கவும் தலைவர் பெரியார் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

13) சர்க்கார் சம்பந்தமுள்ள கோர்ட்டுகள், செக்ரடேரியட் அகெளண்ட் ஜெனரல்  ஆபீஸ் முதலிய கவர்ன்மெண்டாரால்  நடத்தப்படும் பொது இடங்களில், சாப்பாடு நீர் குடித்தல் முதலிய காரியங்களுக்காக இடம் பிரித்து வைத்திருப்பதை இம்மாநாடு பலமாகக் கண்டிப்பதோடு, இந்தப் பழக்க வழக்கம் ஒழிக்கப்படத்தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமென்று தீர்மானிக்கிறது.

14) சர்க்கார் உத்தியோகங்களில் இந்நாட்டு மக்களுக்கு பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் கிறிஸ்தவர், முஸ்லிம்கள், ஆதிதிராவிடர்கள் என்று வகுப்புகள் பிரித்து அந்தப்படி உத்தியோகங்கள் எண்ணிக்கை விகிதாச்சாரம் ஏற்படுத்திய மாஜி மந்திரி தோழர் எஸ். முத்தையா முதலியார் அவர்களை பாராட்டுவதோடு அந்த விகிதாச்சாரம் மிகக் குறைவாய்  இருக்கிறதென்றும் அதை வகுப்பு மக்கள்  எண்ணிக்கைக்கு தக்கபடி பெருக்க வேண்டும் என்றும் அது அனுபவத்தில் கொண்டு வரப்படாத இலாக்காகளிலும் அமலுக்கு கொண்டு வரப்படாத இலாக்காகளிலும் அமலுக்கு கொண்டுவர வேண்டு மென்றும் அரசாங்கத்தாரை  வேண்டிக் கொள்கிறது.

இவ்வேண்டுகோளை அரசாங்கத்தார் அங்கீகரிக்காத பட்சத்தில் அதற்கு தக்க கிளர்ச்சி செய்ய வேண்டியது அவசியமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

15) திருவாரூர் மாநாட்டுத் தீர்மானப்படி திராவிட நாட்டுப்பிரிவினைத் திட்டத்தை நடத்தித் தரும்படி இம்மாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

16) காங்கிரஸ்காரர்கள் நடத்தும் சத்தியாக்கிரகம் அரசியல் காரணங்களுக்காகவோ, அரசியல் பிரச்சினையை முன்னிட்டோ அல்லாமல், திராவிட சமுதாயத்தை நசுக்க வேண்டுமென்ற சூழ்ச்சித் திட்டமாகவும் வரப்போகும் தேர்தலில் பாமரரின் ஓட்டுப் பறிக்கும் தந்திரமாகவும் இருப்பதால் மேற்படி சூழச்சியில் சிக்காமல் இருக்கும்படி திராவிடரை இம்மாநாடு கேட்டுக் கொள்வதுடன் காங்கிரசாரின்  இம்மாதிரியான காரியத்தை வன்மையாகக் கண்டிக்கிறது.

17) திராவிட மக்கள் இந்நாட்டு பழங்குடி மக்களாய் இருந்தும் பிறவியினால் ஜாதி உயர்வு - தாழ்வு அற்ற சமுதாய சம உரிமை கொண்ட சமுகமாய் இருந்தும் இன்று ஆரியர்களின் பழக்க வழக்கங்களையும் சமய ஆசார அனுஷ்டானத்தையும் திராவிடர் மீது சுமத்தப்பட்டு ஆரியர்களால் சூத்திரர்களென்றும் அடிமைகளென்றும் அழைக்கப்படுவதோடு, பொதுக் கோயில், குளம், சத்திரம், சாவடி, ஓட்டல், சிற்றுண்டி, விடுதி முதலிய இடங்களில் ஆரியருக்கு (பார்ப்பனருக்கு) வேறு இடமாகவும் திராவிடருக்கு (பார்ப்பனரல்லாதாருக்கு) வேறு இடமாகவும் பிரித்து இழிவுபடுத்தி நடத்தி வருவதை இம்மாநாடு பலமாகக் கண்டிப்பதோடு அப்பழக்க வழக்கங்கள் ஒழிக்கப்படத்தக்க முறைகளைக் கையாள வேண்டியது அவசியமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

(23.12.1940அன்று சென்னை, சிந்தாதரிப்பேட்டை, பாலகிருஷ்ணன் தெரு, “ஜஸ்டிஸ் ஹாலில்”  (சென்னை விடுதலை அலுவலகம் இங்கேதான் தொடர்ந்தது) சுமார் 2000 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட சீர்த்திருத்த தொண்டர் மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்)

குடிஅரசு - தீர்மானங்கள் - 29.12.1940

இந்திய மணப் பதிவுச் சட்டங்களில் ஆரிய மணப் பதிவுச் சட்டம் என்பது ஒன்று. இது இந்துக்கள்  என்ற ஆரியர்களுக்கு உரியது. 1872-ம் வருட விசேஷ மணச்சட்டத்தை ஒட்டி, ஆரியர் என்ற இந்துக்களாம் ஆரிய சமாஜிகளுக்கு திருப்திதரும் முறையில் தோற்றுவிக்கப்பட்டச் சட்டம் இதுவாகும். இச்சட்டப்படி கலப்பு விவாகங்கள் நடக்கின்றன. மணமகனும், மணமகளும் எந்த ஜாதி எந்த மதத்தினராயினும் சரியே, ஆரிய சமாஜச் சடங்கு செய்து கொண்டும் அல்லது செய்யாமலும் இந்த ஆரிய சமாஜத்தின் மூலம் இந்த ஆரிய மணப்பதிவுச் சட்டப்படி கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்த மணம் சட்டப்படி செல்லுபடியாகத் தகுந்த தென்பர்.

ஆனால் இச்சட்டப்படி நடக்கும் திருமணத்தில் நீக்க முடியாத சங்கடம் நேரிடுகிறது.

உதாரணமாக “பம்பாய் சோஷ்யல் ரிபார்மர்” பத்திரிகையில் உண்மைச் சம்பவம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஒரிசாவில் சம்பய்யா என்ற பார்ப்பன உபாத்தியாயர் தன்சக உபாத்தினியாயினி ஒரு கிறிஸ்தவமாதை மணந்து கொள்ள விரும்பினான். இந்த பார்ப்பன உபாத்தியாயர் தன் பார்ப்பன சாதி முறைப்படி முன்னரே தன் ஜாதியில் ஒரு சிறுமியை மணந்து கொண்டிருக்கிறான்.

இந்த சம்பய்யா என்ற பார்ப்பனன் மூன்று வருடங்களுக்கு முன் அந்த கிறிஸ்துவ உபாத்தியாயினியை மணக்க ஏற்பாடு செய்தான்.

முதலில் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி, அக்கிறஸ்துவ மாதை மணக்க விரும்பினான். ஆனால், கிறிஸ்தவ மதத்தலைவர்கள் சம்பய்யர் கிறிஸ்துவனானால் அவன் இந்து மனைவியும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அவனுடன் வாழ விரும்பியதால், கிறிஸ்துவ மதச் சட்டப்படி, இரண்டாவது மணம் செய்து வைக்க சட்டம் அனுமதிக்காததைக் கூறி மறுத்து விட்டனர். அவ்விதம் இந்து மாது, கிறிஸ்துவ மதத்தைத் தழுவ மறுத்தாலும், இது உறுதிப்படுத்தப்பட கோர்ட் மூலம் ஏற்படும்  தீர்ப்பு கிடைத்து ஒரு வருடம் கடந்த பின்புதான் கிறிஸ்துவ மாதை 2-வது மணம் செய்து கொள்ள வேண்டுமென்பது கிறிஸ்துவ மதச் சட்டம்.

இது சம்பய்யாவுக்குத் தோதுபடவில்லை. அடுத்தபடி பிரம்ம சமாஜ் உதவியை நாடினான். அங்கும் மறுக்கப்பட்டது. இறுதியாக ஆரிய மணப்பதிவுச் சட்டபடி திருமணம் முடிந்தது. இந்த ஆரிய மணச் சட்டப்படி மணமக்கள் ஆரிய வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தால் போதுமானது. இதற்கு பிரமாணிக்க நிரூபணமும் நிர்பந்தத் தேவையில்லை.

ஆரிய மணச் சட்டப்படி மணந்து இவர்கள் 3 வருட காலம் வாழ்க்கை நடத்திச் சலித்து விட்டது போலும், சமீபத்தில் இந்தச் சம்பய்யா தன் சொந்த கிராமத்திற்குச் சென்று, தன் சொந்தக்காரர்களிடம் சரணடைந்து சில இந்து மதச் சடங்குகள் செய்து கொண்டு இந்துவாகி தன் ஜாதியாருடன் சேர்ந்து கொண்டான். அவன் முதல் மனைவியான பிராமணச் சிறுமியும் தன் புருஷனுடன் வாழ வசதிப்பட்டது. இவ்வகையில் முதல் மனைவிக்கு முன்னர் இழைத்த அநீதி பரிசுரிக்கப்பட்டது.

ஆனால் ஆரிய மணச் சட்டப்படி மணந்த இரண்டாவது மனைவியான அந்த கிறிஸ்துவ உபாத்தியாயினியின் பாடு திண்டாட்டத்தில் வந்துவிட்டது. ஆரிய மணச் சட்டப்படி கிறிஸ்துவ உபாத்தியாயினி சம்பய்யாவின் மனைவியாக இருக்கிறாள்.

இந்த ஆரிய மணச் சட்டத்தில் விவாக ரத்துப்பிரிவு கிடையாது. மேலும் ஆரியர்கள் என்பவர்களும் இந்துக்கள் என்றே சட்டப்படி தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இந்துக்கள் சம்பிரதாயப்படி ஒரு ஆண் மகனின் இரண்டாவது மனவைிகளுடன் வாழ விரும்பலாம்.

ஆயினும், அந்த கிறிஸ்துவ மாது சம்பய்யாவை விடுத்து மறுமணம் செய்து கொள்ள இந்த ஆரிய மணச் சட்டம் இடம் தராது. அவளுக்கு ஜீவனோபாய உத்தியோகம் இருப்பதால் அவள் சம்பய்யாவுடன் கூடியோ, தனித்தோ வாழ வசதியிருக்கிறது.

ஆனால், அவள் வேறொருவனை மறுமணம் செய்துகொள்ள முடியாது. அவசரப்பட்டு ஆரிய மணச் சட்டப்படி மணந்து கொண்ட தவறுதலுக்காக இப்போது அவள் வருத்தப்பட வேண்டியதாயிற்று. இத்தகைய சங்கடத்திலிருந்து அவள் விடுபட வேண்டுமானால் அவள் மறுபடியும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, சம்பய்யாமீது விவாகரத்து வழக்குத் தொடர்ந்து விவாகரத்து அடைய வேண்டும். அப்படி விவாகரத்துத் தீர்ப்பான ஒரு வருடம் கடந்தே அவள் மறுமணம் செய்து கொள்ள முடியும். இம்மாதிரியான சங்கடங்களுக்கு அரைகுறைச் சட்டச் சரத்துக்களே காரணம் என்பது தெளிவுபடுகிறது. ஆகவே இந்து மதச் சட்டத்தையும் பதிவு மணச் சட்டத்தையும் சமுக சம்பிரதாயச் சட்டங்களையும் உலகோருக்கு, நிரந்தரமான பலன் பயக்கும் முறையில் திருத்தி அமைத்துப் புதுவதான சட்ட திட்டம் காண இந்து மதச் சட்ட சீர்திருத்தவாதிகள் கவனம் செலுத்த வேண்டுகிறோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 29.12.1940

அண்ணாமலை யூனிவர்சிட்டி என்னும் சிதம்பரம் சர்வகலாசாலை மாணவர்கள் நடந்து கொண்ட விஷயமாய் சர்க்கார் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளைப்பற்றியும் அவற்றை சில பார்ப்பனர்கள் வைஸ்சான்சலரான சர்.கே.வி. ரெட்டி அவர்களுக்கு விரோதமாகப் பயன்படுத்திக்கொண்டு வருவதோடு பார்ப்பனப் பத்திரிகைகள் செய்து வரும் விஷமப் பிரசாரங்கள்  பற்றியும் பத்திரிகைகளில் நேயர்கள் பார்த்திருக்கலாம்.

சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் அண்ணாமலை யூனிவர்சிட்டி வைஸ்சான்சலர் பதவிக்கு வந்தது முதல் பொதுவாகவே பல பார்ப்பனர்கள் பலவிதக் குறைகூறி வந்ததும் பார்ப்பனப் பத்திரிகைகளும் அதைத் துவக்கி விட்டு ஆதரித்து வருவதும் யாவரும் அறிந்ததேயாகும். அப்படிப்பட்ட அவர்கள் இப்போது  சிறிதும் வைஸ்சான்சலருக்குச் சம்மந்தமில்லாத தற்போதைய சம்பவங்களுடன் அவரை பிணைத்துக்கொண்டு “வைஸ்சான்சலர் யூனிவர்சிட்டியிலிருந்து விலக்கப்பட வேண்டும்” என்று விஷமக் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். இதற்குக் காரணம் வைஸ்சான்சலர் சர்.கே.வி. ரெட்டிநாயுடு அவர்கள் ஒரு பார்ப்பனரல்லாதாராய் இருக்கிறார் என்பதல்லாமல் வேறு ஒரு காரியத்திற்கு ஆகவும் இல்லை என்று நன்றாக விளங்குகிறது.

பொதுவுடைமைப் பிரசாரம்

அண்ணாமலை யூனிவர்சிட்டியில் மகாகனம் சாஸ்திரியார் வைஸ்சான்சலராய் இருக்கும்போதே அதாவது 2வருட காலத்துக்கு முன்பிருந்தே மாணவர்களுடைய கிளர்ச்சிகள் இருந்து வருகின்றன. அக்கலாசாலையில் எப்படியோ பொதுஉடைமை பிரசாரம் புகுந்து விட்டது. அது சாஸ்திரியாருக்கு நன்றாய் தெரிந்திருந்தும் சாஸ்திரியாரின் நிர்வாகச் சக்தி குறைவால்  வளர்ந்துவர வேண்டியதாய் விட்டது. பொது உடைமை கொள்கை சரியா தப்பா என்பதைப் பற்றி இங்கு நாம் விவரிக்கவில்லை. போதிய உலக ஞானம் பெறாத அறியாத குழந்தைகளும் பெற்றோர்கள் உயர்தர கல்வி பெறுவதற்காக தங்களது அரும் பெரும் செல்வத்தைச் செலவு செய்து படிக்க அனுப்பப்பட்ட குழந்தைகளுமானவர்கள். அதை விட்டுவிட்டு, வேறு காரியத்தில் கவனம் செலுத்த விடுவதால் காலேஜ் எதற்கு ஏற்பட்டதோ அது பயன்படாமலும் பெற்றோர்கள் எதற்கு அனுப்பினார்களோ அது சித்தி பெறாமலும் போவதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

எப்படி இருந்தாலும் கனம் சாஸ்தியார் காலத்தில் யூனிவர்சிட்டியில் பொதுவுடைமைக் கொள்கை வேரூன்றி விட்டது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்தக் கொள்கை வளர்வதற்கு இடம் ஏற்பட்டதற்கு இன்னும் ஒரு காரணமும் சொல்லலாம். என்னவெனில் காங்கிரஸ் பிரசாரம் பள்ளிக்கூடங்களில் நடப்பதற்குப் பார்ப்பன உபாத்தியாயர்கள் இடம் கொடுத்ததால் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுகிற மாதிரி பயன்பட்டு விட்டது.

சம்பவ விவரம்

இது நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகச் சர்க்காருக்குத் தெரிய வந்ததாலும் காங்கிரசாரும் கிளர்ச்சி செய்யப் புறப்பட்டுவிட்டதாலும் சர்க்காரார் சற்றுக் கவனம் செலுத்த வேண்டியதாகி 21.11.1940இல் சந்தேகப்பட்ட 18 மாணவர்கள் அறையைச் சோதனை போட ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகிய அசிஸ்டெண்ட் சூப்பரண்டை சில போலீசாருடன் அனுப்பி இருக்கிறார்கள். இந்த அசிஸ்டெண்ட் சூப்பரண்டானவர் சோதனை வாரண்டுடன் யூனிவர்சிட்டிக்கு வந்து வைஸ்சான்சலரை அந்த மாணவர்களின் அறையின் நெம்பரை கேட்டிருக்கிறார். வைஸ்சான்சலர் ஆஸ்டல் குமாஸ்தாவைக் கூப்பிட்டு அறைகளின் நம்பரை கொடுக்கச் சொல்லி இருக்கிறார் நம்பர் தெரிந்த உடன் அ.சூப்பிரண்டு சோதனை போட முன் வந்த ஒரு மாணவனின் அறையை  சோதனை செய்ய துவக்கினார். உடனே மாணவர்கள் ஒன்றுகூடி கற்களை அ.சூப்பிரண்ட்மீது வீசி கலகம் செய்திருக்கிறார்கள்.

அ.சூப்பிரண்டுக்கும் லேசான காயங்கள் பட்டிருக்கின்றன

போலீசாரும் அ.சூ.வும் வெளியில் சதுக்கத்துக்கு வந்துவிட்டார்கள். இதைப் பார்த்த வைஸ்சான்சலர் தனது ஆபீசிலிருந்து கீழே இறங்கி வந்தார். அவரை பிள்ளைகள் நீர் எப்படி போலீசை உள்ளே அனுமதித்தீர்கள் என்று ஆத்திரத்தோடு கோபித்திருக்கிறார்கள். இதற்கு வைஸ்சான்சலர் போலீசார் வாரண்டோடு வந்தால் தடுக்க தனக்கு அதிகாரமில்லை என்று சமாதானம் சொல்லி இருக்கிறார். இவ்வளவு நடந்தும் மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போய்விட்டது. பிறகு டிசம்பர் 13 ஆம்தேதி 6மாணவர்களைத் தன் இருப்பிடத்துக்கு அனுப்பும்படி ஜில்லா மாஜிஸ்ட்ரேட் இடம் இருந்து கடிதம் வைஸ்சான்சலருக்கு வந்ததால் அவர் அந்த ஆறு பேரையும் கூப்பிட்டுக் கடிதத்தைப் பற்றி சொல்லி  இஷ்டப்பட்டால் போங்கள் என்றும் போக வேண்டியது சிரமமென்றும் சொல்லி இருக்கிறார். அதன்மீது பிள்ளைகள் வார்டன்களுடன் சென்று இருக்கிறார்கள். சென்ற இடத்தில் ஜில்லா சூப்ரண்டு அவர்களை அரஸ்ட் செய்திருப்பதாகச் சொல்லி கடலூருக்கு மோட்டாரில் அனுப்பி விட்டார். உடனே மற்ற பிள்ளைகள் 200பேர்கள் ஒரு மைல் தூரத்திலுள்ள கலெக்டர் தங்கி இருக்கிற பங்களா காம்பவுண்டுக்குள் புகுந்து கண்டபடி வார்த்தைகள் பேசி வார்டனை வெளியில் அனுப்பும்படியும் அவரை கழுத்தை முறிக்கப் போவதாகவும் கூச்சல் போட்டிருக்கிறார்கள். அதன்மீது போலீஸ்காரர் 2தடவை எச்சரிக்கை செய்து பார்த்தும் பிள்ளைகள் போகாததால் அவர்களைப் போலீசார் அடித்து துரத்தி இருக்கிறார்கள். இதில் 32 பேருக்குக் காயம்பட்டிருக்கிறது. இதுதான் அங்கு நடந்ததாக நமக்கு அறிக்கை கிடைத்திருக்கிறது.

வைஸ்சான்சலர்மீது குற்றமென்ன?

இந்த நிலையில் நடந்த நடவடிக்கைகளில் ஏதாவது சில மாறுதல்கள் இருந்தாலும் வைஸ்சான்சலர்மீது குற்றமென்ன என்பதே இங்கு யோசிக்க வேண்டியதாகும். சிதம்பரத்தில் உள்ள சில பார்ப்பன வக்கீல்கள், அதுவும் முனிசீப் கோர்ட்டு வக்கீல்கள் ஒன்று சேர்ந்து கொண்டு பார்ப்பன பத்திரிகை நிருபர்களும் சேர்ந்துகொண்டு வைஸ்சான்சலர் வேலையை விட்டு போக வேண்டும் என்று கிளர்ச்சி செய்ய அவர் பார்ப்பனரல்லாதாராய் இருக்கிறார் என்பதல்லாமல் வேறு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டுகிறோம். சென்ற இரண்டு வருஷத்திற்கு முன் மகாகனம் சாஸ்திரியார் கிளர்ச்சியில் நேரில் சம்பந்தப்படுத்தப்பட்டு பிள்ளைகள்  பள்ளிக்கூடத்திற்கு வராமல் பகிஷ்காரம் செய்து மற்ற பிள்ளைகளும் வர முடியாமல் தடுக்கப்பட்டு காலேஜூம் 46 நாள் மூடப்பட்டுக் கிடந்த காலத்தில் அப்போது வைஸ்சான்சலராயிருந்த சாஸ்திரியாரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல் பிள்ளைகளை மாத்திரம் குற்றம் சொன்ன பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் சர். கே.வி. ரெட்டியைப் பற்றி ஏன் விஷமப் பிரசாரம் செய்ய வேண்டும்?

சர். கே.வி.ரெட்டி போலீசாரை நுழையாதே என்று சொல்ல முடியுமா? ஜில்லா மாஜிஸ்திரேட் கூப்பிட்டால் போகாதே என்ற சொல்ல முடியுமா அல்லது அனுப்பாமல் இருக்க முடியுமா என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்றும் கல்லூரிக்கு ஒரு மைல் தூரத்திலுள்ள கலெக்டர்  இறங்கி இருக்கும் பங்களாவுக்குப் பிள்ளைகள் சென்று கலவரம் செய்தால் வைஸ்சான்சலர் என்ன செய்ய முடியும்? “பிள்ளைகள் கலவரம் செய்யாமல் இருக்கும்போதே போலீசார் அடித்தார்கள்” என்று வைத்துக் கொண்டாலும் வைஸ்சான்சலர்  அதற்கு என்ன செய்ய முடியும்?

வேறு அத்தாட்சி வேண்டுமா?

பிள்ளைகள் கலெக்டர் பங்களாவுக்கச் சென்றது தங்கள் சுயேச்சையாய் போனதாகும். அன்றியும் இவை யூனிவர்சிட்டிக்குச் சம்பந்தப்படாத காரியங்களால் ஏற்பட்ட நடவடிக்கைகளாகும். இதற்குச் சர்க்கார் பொறுப்பாளியாகலாம். சர்க்காரைக் கேட்க வேண்டியது நியாயமாகலாம். அதைவிடுத்து இந்த சம்பவத்தை ஒரு பார்ப்பனர் அல்லாதாருக்குத் தொல்லை கொடுப்பதற்காக பார்ப்பனர்களும் அவர்களது  பத்திரிகைகளும் பயன்படுத்திக் கொள்வது உண்மையில் பலமாகக் கண்டிக்கத் தக்கதாகும். பார்ப்பனர்கள் எவ்வளவு தப்பான வழியில் பிரவேசித்து பார்ப்பனர் அல்லாதார்களை நசுக்க முயற்சிக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி என்ன வேண்டியிருக் கிறது என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

இதை உண்மையாக நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாருக்கும் இரத்தம் கொதிக்காமல் இருக்கவே இருக்காது. ஆகவே ஒவ்வொரு ஊரிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் கண்டிப்பாய் பொதுக்கூட்டம் கூட்டி பார்ப்பனரின் இந்த வஞ்சகச் செயலைக் கண்டித்து பேசி தீர்மானங்கள் செய்து பொது மக்களுக்கு உண்மையை விளக்குவதோடு தீர்மானங்களைப் பத்திரிகைகளுக்கும் சர். ரெட்டி நாயுடு அவர்களுக்கும் அனுப்பிக் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(விடுதலை)

குடிஅரசு - கட்டுரை - 29.12.1940

அண்ணாமலை சர்வகலாசாலை மாணவர்கள் நடந்துகொண்டது பற்றியும் சர்க்கார் எடுத்துக்கொண்ட நடவடிக்கை குறித்தும் “விடுதலை”யில் ஒரு பொறுப்புள்ள நிருபர் எழுதியிருக்கும் செய்தியையும் அது சம்பந்தமாக “விடுதலை” டிசம்பர் 25ஆம் தேதி எழுதியுள்ள தலையங்கத்தையும் வேறு பக்கங்களில் வெளியிட்டிருக்கிறோம். அவைகளைப் பார்ப்பவர்களுக்கு உண்மையில் அன்று அதாவது டிசம்பர் 13ஆம் தேதி சிதம்பரத்தில் நடந்ததென்ன; இன்று ஆரியவர்க்கத்தாள்களும், ஆரிய அடிமைகளும், ஆரியப் பூண்டுகளும் போடும் கூப்பாடும் செய்யும் கண்டனத் தீர்மானமும் எவ்வளவு நேர்மையானவை நாணயமானவை என்பது விளங்காமல்போகாது.

எய்தவனிருக்க அம்பை நோவதுபோல் மேற்படி வருந்தக்கூடிய சம்பவத்துக்கு அடிகோலிவிட்டுச் சென்றவரை விட்டுவிட்டு நேற்றுவந்த பார்ப்பனரல்லாத சர்.கே.வி. ரெட்டிநாயுடு மீது பாய்வதும், அவரை  நீக்கவேண்டுமென்று கோருவதும், அவர் நிர்வாகத் திறமையில்லாதவர் என்று கூறுவதும் ஆன காரியங்கள் எவ்வளவு போக்கிரித்தனமானதும் குறும்புத்தனமானதுமான காரியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அவ்வர்க்கம் செய்வது இன்று நேற்று ஏற்பட்ட காரியமென்றோ, பழக்கமென்றோ யாரும் கருதவேண்டியதில்லை என்று அவ்வர்க்கம் இந்நாட்டில் அடிஎடுத்து வைத்ததோ அன்றுமுதலே இத்தகைய  காரியங்கள் செய்வது தங்களது குலதர்மமாகக் கருதி வந்திருக்கிறது; வருகிறது என்பது புனைந்துரையன்று சான்றுடன்  கூடியதாகும்.

பழைய நாள் சரிதைகளைப் புரட்டிப் பார்த்தாலும் இவ்வுண்மை நன்கு விளங்கும். புராணங்கள் இராமாயணம், இதிகாசம் முதலிய நூல்களை பகுத்தறிவுகொண்டு படிப்போர்களுக்கும் இது தெளிவாகும். அந்நாட்களில் நம் மன்னர்களையும், தலைவர்களையும் ராட்சதர்கள், அரக்கர்கள், அசுரர்கள் என்றெல்லாம் பேதப்படுத்தி மக்கள் மனத்தில் பயங்கரத் தோற்றத்தை உண்டுபண்ணி அவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வந்தார்கள் என்பதையும் நம்மவர்களைக் கொண்டே அவர்களை வீழ்த்தச் செய்து வந்ததையும் அவைகளில் பார்க்கக் காணலாம்.

இவைகள்  முந்நாளில் நடந்தன என எண்ணலாம். ஆனால், கடந்த மத்திய அசம்பிளி தேர்தலின்போது, யாரோ ஒரு அய்ரோப்பிய மாஜிஸ்ரேட் இந்நாட்டு வழக்கம் தெரியாது ஒரு பெண் செலுத்த வேண்டிய அபராதத்துக்கு அவரது தாலியைக் கழற்றிக் கொடுக்கும்படி சொன்னதாகவும் பின்னால் இந்நாட்டு வழக்கத்தை அறிந்து அத்தாலியை அப்பெண்ணுக்குக் கொடுத்து விடும்படி உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படும் செய்தியைத் திருத்தி “சர்.ராமசாமி முதலியார் தாலி அறுத்தார்” என்று பறைசாற்றி விஷமப் பிரசாரம் செய்துவந்ததைப் பார்ப்பனரல்லாதார் இதற்குள் மறந்திருப்பார்களா? என்று கேட்கிறோம்.

அந்நாளில் நம் தமிழ் மன்னர்களை இழிவுபடுத்தி, கேவலப்படுத்தி எழுதிவைத்த புளுகு ஆபாசக் குப்பைகளை ஆதாரமாகக்கொண்டு கோவில்கட்டி ஆரிய வர்க்கத்தைத் தழைக்கச் செய்யவும், நமது வர்க்கத்தை அழிக்கவும் தோன்றிய கொடியோர்களைச் சிறிதும் மானம் ரோஷமில்லாது பூசித்துவருவதாலும், திருவிழா, பண்டிகை முதலியன கொண்டாடி வருவதினாலும், அன்று சர். ராமசாமி முதலியாரைக் குறித்துத் திருத்திக் கூறியதைக் கேட்டுக்கொண்டு வாளா இருந்ததினாலும் அன்றோ, இன்று பார்ப்பனரல்லாதார் ஒருவர் சர்வகலாசாலை நிர்வாகத்தில் பொறுப்புவகித்து நடத்துவதா என்ற எண்ணம் மேலிட்டு அவ்வர்க்கம் இத்தகைய விஷமத்தைச் செய்து வருகின்றது என்பதை நாம் எத்தனை தடவை எடுத்துச் சொல்லினும் நமது தோழர்களுக்குப் பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு உறைப்பதில்லையே.

நம்மவர்களுடைய இந்தக் கவலை ஈனத்தினால்தான் 100-க்கு 3பேர்களாயுள்ள அவ்வாரிய வர்க்கம் நம்மை அதாவது 100-க்கு 97 பேர்களாயுள்ள பார்ப்பனரல்லாத மக்களை அடிமை கொண்டு நம்மவர்கள் மீது சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும், பார்ப்பனரல்லாதார்களிலே, அதிலும் படித்தவர் கூட்டத்திலே சிலர், பார்ப்பனர் அறிவு “சிறந்தது” என தன்மானமற்று தனது ‘அறிவை’ அடகு வைத்துவிட்டு பேசுவதினாலேதான் பார்ப்பனரல்லாதார் எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு அறிவு படைத்திருந் தாலும், எவ்வளவு திறமைசாலியாயிருந்தாலும் இவ்வாறு தூற்றவும் கண்டிக்கவும் பார்ப்பனர்கள் முன்வந்து விடுகிறார்கள்.

மேற்படி சர்வகலா சாலையில் இதற்கு முன் “வைஸ்சான்சல”ராயிருந்த மகாகனம் சாஸ்திரியாரைவிட சர்.கே.வி. ரெட்டிநாயுடு அவர்கள் எவ்வகையில் திறமையிலோ, ஆற்றலிலோ, அறிவிலோ குறைந்தவரா என்று பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மகாகனம் சாஸ்திரியார் தென்னாப்பிரிக்காவின் இந்திய சர்க்காரின் ஏஜன்டாக இருந்து நடத்திய நிர்வாகத்தைவிட சர்.கே.வி. ரெட்டிநாயுடு அவர்கள் அப்பதவியைப் பதின்மடங்கு திறமையோடுதான்  நடத்தி வந்திருக்கிறார். அதுபோலவே மகாகனம் சாஸ்திரியார் வகித்துவந்த வைஸ்சான்சலர் பதவியையும் அதே சர். ரெட்டிநாயுடு அவர்கள் திறமையுடன் நடத்தி வருகிறார்கள். எங்கு இவருடைய நிர்வாகத்திறமை மகாகனம் சாஸ்திரியாருடையதை விடப் பதின்மடங்கு பிரகாசித்துவிடப் போகிறதோ என்ற அச்சத்தினால் அவ்வர்க்கத்தினரால் இச்சூழ்ச்சி செய்யப்பட்டு வருவதையாவது, பார்ப்பனர்கள்தான் பார்ப்பனரல்லாதாரைவிட அறிவாளிகள் என்றோ திறமைசாலிகள் என்றோ கருதியும் சொல்லியும் வரும்சில பார்ப்பனரல்லாத மக்கள் எண்ணிப் பார்க்கட்டும்.

இன்று அந்தச் சர்வ கலாசாலையில் மாணவர்கள் அக்கிளர்ச்சி செய்வதற்கும் சர்க்கார் நடவடிக்கை எடுத்துக்கொள்வதற்கும் பெரிதும் பொறுப்பாளியானவர் மகாகனம் சாஸ்திரியார் என்பது மற்றொரு பக்கத்தில் வரும் செய்தியைப்  படிப்பவர் எவருக்கும் நன்கு விளங்கும்.

விஷச்செடியின் வித்தை வளர்க்க விட்டவர் ஒருவர்; அது முளைத்து வெளியே கிளம்பியதும், இது செடியாகி மரமானால் பெரியஆபத்தைக் கொடுக்கும் என எண்ணி கிள்ளி எறிய வந்தவர் சர்க்கார். உண்மை இவ்வளவுதான். இதற்கு சர். ரெட்டிநாயுடுகாரு எந்தவகையில் பொறுப்பாளியாவார் சம்பந்தமுடையவர் ஆவார் என்று கேட்கிறோம்.

அடுத்தபடியாக சர். ரெட்டிநாயுடு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் - சர். ரெட்டிநாயுடு எப்படி மாணவர்களைப் போலீசாரிடம் ஒப்புவிக்கலாம் என்பது. இதற்குத் தகுந்த பதில் செய்தியிலே நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. இவராக அம்மாணவர்களைப் போலீசாரிடம் ஒப்புவிக்கவில்லை என்பதும், அதிகாரியின், அதுவும் ஜில்லா மாஜிஸ்ரேட்டின் அழைப்புக்குப் போவது நல்லது என்றும் இஷ்டம்போல் செய்யலாம் என்றும் கூறி மாணவர் இஷ்டத்திற்கே விட்டுவிட்டார் என்பதும் தெரியவரும். எனவே இக்குற்றச்சாட்டு பொருத்தமற்றதுடன் ஆதாரமற்றதென்பதும் விளங்கும்.

மாணவர்கள் கூட்டத்தைப் போலீசார் 13ஆம் தேதி சிதம்பரத்தில் தடியடிப்பிரயோகம் செய்து  கலைத்ததற்கும், சர். ரெட்டிநாயுடுகாருக்கும் ஏதாவது நேர் சம்பந்தமிருக்கிறதா என்பது எண்ணிப் பார்க்கவேண்டும். அவர் இருக்கும் இடத்திற்கும் சம்பவம் நடந்த இடத்திற்கும் உள்ள தூரத்தை எண்ணிப் பார்க்கையில் அவர் உடனே அதை அறியமுடியுமா? செய்தியாவது உடனே அவருக்குக் கிடைத்திருக்க முடியுமா? என்பதும் ஊகிக்க முடியும்.

இவைகளை எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கையில், பார்ப்பனரல்லாதார் ஒருவர் அச்சர்வகலாசாலையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்துவதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா? இது மனுநீதிக்கு ஏற்றதா? என்ற காரணத்தின் மீது தோன்றிய விஷமத்தனம் என்பது யாவரும் எளிதில் உணர்ந்துகொள்ளக் கூடிய காரியமாகும்.

பார்ப்பனரல்லாதார் இவ்வளவு விழிப்பாயிருந்துவரும் இந்நாளிலே இவ்வளவு பகிரங்க மாக ஆரியவர்க்கம் தனது சூழ்ச்சியைச் செய்துவருமேயானால், இதன் உண்மையை எடுத்து விளக்கிக் காட்டிய பின்னும் வாளாயிருப்பரேல் அவர்களது உடலில் ஓடுவது பச்சை இரத்தந்தானா?  அல்லவா என்பதில் யாருக்கும் சந்தேகம் தோன்றாமலிருக்க முடியுமா? என்று கேட்கிறோம். எனவே, அத்தகைய சந்தேகத்திற்கு இடம் கொடாதவாறு தமிழ்மக்கள் யாவரும் திராவிடர் யாவரும் இதனை ஒரு படிப்பினையாகக்கொண்டு ஒற்றுமையாய் நடந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 29.12.1940

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: